சமுக பாதுகாப்பு வரி எனும் பெயரில் அரசாங்கம் கொண்டுவந்த வரிவிதிப்பால் உள்நாட்டில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் வர்த்தகர்கள் மற்றும் சிறிய கைத்தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதிய வரி திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகி உள்ளன.
செவ்வாய்க்கிழமை (11) வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட உள்நாட்டு வருவாய் திருத்தச் சட்டமூலத்தின் படி வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளும் பல திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இதன்படி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனமொன்றின் இலாபத்திற்கு விதிக்கப்பட்ட வரி 14% இல் இருந்து 30% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உற்பத்தி நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்திற்கான வரி விகிதம் 18% இல் இருந்து 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களின் இலாபத்தின் மீது விதிக்கப்படும் வரி 14%லிருந்து 30% ஆக உயரும்.
மது, புகையிலை, பந்தயம் மற்றும் சூதாட்டத் தொழில்கள் மூலம் ஈட்டப்படும் இலாபத்திற்கு 40% வரி விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு 2023 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அகற்றப்பட உள்ளது.
மேலும், ஒரு நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளராக இல்லாத ஒருவர், அந்த நிறுவனத்திற்கு கற்பித்தல், விரிவுரைகள், பரீட்சைகளை நடத்துதல், பரீட்சை கண்காணிப்பு போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் மாதம் 100,000 க்கு மேல் சம்பாதித்தால், அந்த தொகையிலிருந்து 5% வரி பிடித்தம் செய்யப்படும்.
மருத்துவர், பொறியாளர், பட்டயக் கணக்காளர், வழக்கறிஞர், மென்பொருள் உருவாக்குநர், ஆராய்ச்சியாளர் போன்றவர்கள் ஒரு நிறுவனத்திற்குச் சேவை வழங்கும் போது, மாதம் ஒரு இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால், அவர்களிடமும் 5% வரி பிடித்தம் செயயப்படும்.