உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (13) காலை தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் மாதாந்த வருமான வரி தொடர்பான நிலைமையை விளக்கிய அமைச்சர், உத்தியோகபூர்வ வங்கி முறைக்கு வெளியே சட்டவிரோதமாக நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இந்த வரிச் சலுகை கிடைக்காது என்றார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் நபர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“நீங்கள் சம்பாதித்தவுடன் பணம் செலுத்தும் வரி முறை இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி நாட்டின் வரிக் கொள்கைகளுக்கு உட்பட்டவர். எனவே, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் அந்த நாடு தொடர்பான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டுப் பணத்துக்கு இனி ஒருபோதும் வரி விதிக்க மாட்டோம். அவ்வாறு செய்வது நெறிமுறை அல்ல.
ஆனால் நாட்டின் அதிகாரபூர்வ வங்கி முறை மூலம் வெளிநாட்டு நாணயங்களில் பணம் அனுப்பப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரிச் சலுகை கிடைக்கும். மற்றபடி சட்ட விரோதமான வேறு வழிகளுக்கு ஊடாக இந்த நாட்டுக்கு பணம் அனுப்பி வரிச்சலுகையை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் கண்டிப்பாக புதிய வருமான வரி விதிப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்”. என்றார் அமைச்சர்.
இதேவேளை, வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பொருட்கள் பழுதடைவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் தனியார் நிறுவனங்களில் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, புதிய திட்டமாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்ள பொருட்களை ஸ்கான் செய்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்,” என்றும் அமைச்சர் கூறினார்.