யாழில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்! பொலிஸார் அசமந்தப்போக்கு; மக்கள் விசனம்

யாழ். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பொலிஸ் இந்த விடயத்தில் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சியின் கீழ் அச்சுவேலி, தெல்லிப்பழை, இளவாலை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி, பலாலி போன்ற பகுதிகள் அடங்குகின்றன.

அண்மை நாட்களாக பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுகளில் வழிப்பறிக் கொள்ளைகளும், வீடு உடைத்து திருடும் சம்பவங்களும், மோட்டார் சைக்கிள் திருட்டுக்களும் அதிகரித்துள்ளன.

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவில் ஒரே நாளில் 4 களவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 3 வழிப்பறிச் சம்பவங்களில் 10 பவுண் நகைகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வீட்டின் கூரை பிரித்து பகல் வேளையில் நான்கரைப் பவுண் நகைகளும், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது.

அதேநேரம், பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் கடந்த சில நாள்களாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதும் வடமராட்சிப் பிரதேசத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாகக் குற்றங்கள் அதிகரித்துள்ளபோதும், இதுவரையில் பொலிஸார் சந்தேகநபர்கள் எவரையும் கைது செய்யவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் என்று கூறும் பொதுமக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸார் விரைவாகச் செயற்பட்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது என்று தெரிவிக்கும் மக்கள், காங்கேசன்துறைப் பிராந்தியத்தில் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகின்றனர்.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள் தமக்குக் கீழ் பல்வேறு பொலிஸ் குழுக்களை அமைத்து செயற்படுத்துவது வழமை என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸார், ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்றாலும், இவ்வாறான குழுக்களுக்கு அந்த விடயத்தில் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகின்றது.

அதனால் அந்தக் குழுக்கள் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்யக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணம் பிராந்தியத்திலும் அவ்வாறான பொலிஸ் குழுக்களே குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து நீதிமன்றங்களில் முற்படுத்துகின்றன.

காங்கேசன்துறைப் பிராந்தியத்திலும் அவ்வாறான பொலிஸ் குழுக்கள் முன்னர் செயற்பட்டிருந்தபோதும், இப்போது அந்தப் பொலிஸ் குழுக்களின் நடவடிக்கைகள் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும், அந்தக் குழுக்கள் செயற்றிறன் அற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளமையே குற்றச் செயல்கள் அதிகரிக்கக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுகளில் நடக்கும் குற்றங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அங்குள்ள பொலிஸார் கூறுகின்றனர்.

ஒரு பொலிஸ் பிரிவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் இன்னொரு பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருப்பதால் உடனடி நடவடிக்கைகளைத் தங்களால் மேற்கொள்ள முடியாதுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் தங்களாலான முயற்சிகளை முன்னெடுக்கின்றோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

திருடர்கள் அதிகளவில் நடமாடுவதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய பொலிஸார், குற்றவாளிகளைக் கைது செய்யாது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றனர்.

இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீதியிலும், வீட்டிலும் அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ள மக்கள், இந்த விடயத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin