புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய தயாராக இருந்த போதிலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் மீது புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மத்தியில் வலுவான நம்பிக்கையை உருவாக்குவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

புலம்பெயர் அமைப்புகளுடனான பேச்சுவார்த்தைகள் சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் குழுக்களாகவும் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் வாழ்ந்து வரும் பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்டு வருகின்றனர்.

இந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருந்தாலும், அவர்களுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்த நிலையில் அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் திகதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இன்னும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர்வுகாணும் வகையில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உட்பட புலம்பெயர் அமைப்புகள் மற்றும் சில தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் நீக்கியது.

Recommended For You

About the Author: admin