நெட்டா நிறுவன அதிகாரி ஒருவர் தென்னந்தோப்பில் நின்று அட்டைப் பண்ணை வளர்ப்பால் கடலுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூறுவது கடலை அழித்து தென்னந்தோப்பாக மாற்ற முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கேள்வி எழுப்பினார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்குடா கடலில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணை தொடர்பில் நெட்டா நிறுவன அதிகாரியை மூன்று முறை நேரில் சந்திக்க முயற்சி செய்த போதும் பயன் கிட்ட வில்லை.
மீனவ அமைப்பினர் ஆகிய நாங்கள் அட்டை பண்ணைகள் தொடர்பில் எமக்குள்ள சந்தேகங்களை கேட்டறிவதற்கு முயற்சி செய்த போதும் குறித்த அதிகாரியை சந்திக்க முடியாது.
ஆனால் குறித்த அதிகாரி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதால் பாதிப்பு ஏற்படாது என முகநூல் பக்கம் ஒன்றின் ஊடாக கடலிலோ அல்லது கடற்கரையிலோ நின்று கருத்துக் கூறாமல் தென்னந்தோப்பில் நின்று கருத்துக் கூறுகிறார்.
இவருடைய செயற்பாட்டை பார்க்கும்போது அட்டை பண்ணைகளை சட்டத்திற்கு முரணான வகையில் வழங்கி கடலை தென்னந்தோப்பாக மாற்றி விடலாம் என நினைக்கிறாரா என எண்ணத் தோன்றுகிறது.
அட்டைப் பண்ணையால் கடல் வளம் பாதிக்கப்படாது என்றால் ஊடகங்கள் முன் விஞ்ஞான பூர்வமாக கூறுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இல்லாவிட்டால் மீனவ அமைப்புக்கள் நாங்கள் வருகிறோம் ஊடகங்களுக்கு முன் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள்.
இவற்றை விடுத்து மீனவ மக்களின் குரல்களை அடக்குவதற்கோ அல்லது மீனவ சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களைக் கோருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.