யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை அந்த விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் நிதி உதவியின் கீழ் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய தரத்திற்கு கொண்டு வந்தோம். அதற்கு தேவையான சான்றுகளை விமான சேவைகள் அதிகார சபையின் ஊடாக பெற்றுக்கொண்டோம். பின்னர் இந்தியாவின் விமான சேவைகள் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தோம்.
முன்னர் அவர்கள் அதற்கு இணங்கியிருந்த போதும், அதனை திறந்த பின்னர் விமானம் வரவில்லை. அது அவர்கள் பக்கத்தில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளாக இருக்கலாம்.அது தொடர்பான நடவடிக்கைகள் தள்ளிப் போகின்றன.
எவ்வாறாயினும் இந்த மாத இறுதியில் விமானங்கள் சில வரும் என்று கூறப்படுகின்றது. முடிந்தளவு இந்திய சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தினால் இந்த விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி ஓடுபாதையை நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய விமானங்கள் வரக் கூடிய வகையில் கலந்துரையாடி ஓடுபாதையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.