இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு ஈரானுக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கால்பந்து மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் குழுவே இந்த கோரிக்கையை ஃபிஃபாவிடம் முன்வைத்துள்ளது.
பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புப் படையினரின் வன்முறை ஒடுக்குமுறைக்கு மத்தியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஓபன் ஸ்டேடியம்ஸ் என்ற மனித உரிமைக் குழுவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஈரானின் மிருகத்தனம் மற்றும் அதன் சொந்த மக்கள் மீதான போர்க்குணம் என்பனவே இந்தக் கோரிக்கைக்கான காரணம் என்று குறித்த மனித உரிமைக்குழு தெரிவித்திருந்தது.
நாடு முழுவதும் பெண்கள் கால்பந்து மைதானத்திற்குள் அனுமதிக்கப்படாவிட்டால், அத்துடன் ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு வெறுமனே அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமானால், ஈரானிய கால்பந்து அமைப்பை சுயாதீன அமைப்பாக கருதமுடியாது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது.
எனினும் ஈரானில் ஆண்கள் விளையாடும் விளையாட்டு மைதானங்களில் பெண்கள் நுழைவதற்கு அதிகாரப்பூர்வ தடை எதுவும் இல்லை என்றாலும், அவர்களுக்கு அடிக்கடி அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபிஃபா, அதிக பெண்களை மைதானங்களுக்குள் அனுமதிக்குமாறு ஈரானிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த வலியுறுத்தலை அடுத்து, சில பெண்கள் ஈரானின் பாரசீக வளைகுடாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சூழ்நிலையிலேயே 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு ஈரானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.