அமெரிக்காவில் சிறுமி ஒருவரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றி இருக்கிறது அப்பிள் கைக்கடிகாரம். இதன்மூலம் தக்க நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உடல்நிலை சீராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்தை சேர்ந்தவர் ஜெசிகா கிட்சன். இவருடைய மகள் இமானி மைல்ஸ்.அண்மையில் இமானியின் கையில் இருந்த அப்பிள் கைக்கடிகாரம் தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்திருக்கிறது. இதனையடுத்து கடிகாரத்தை பரிசோதனை செய்தபோது சிறுமியின் இதயத் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக கைக்கடிகாரம் சுட்டிக்காட்டவே தாயும் மகளும் சந்தேகமடைந்தனர். இதனை தொடர்ந்து, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஜெசிகா.
அங்கே இமானியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு appendix-ல் புற்றுநோய் கட்டி இருப்பதை அறிந்திருக்கின்றனர். neuroendocrine tumour எனப்படும் இந்த கட்டியை அகற்ற உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து இமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பேசிய இமானியின் தாய் ஜெசிகா,”அது வித்தியாசமாக இருந்தது. இதற்கு முன்னர் இப்படி நடந்தது இல்லை. என் மகளின் இதயத் துடிப்பு சீரற்று இருப்பதாக கைக்கடிகாரம் சுட்டிக்காட்டியது. உடனடியாக அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. குழந்தைகளுக்கு இந்த வகை புற்றுநோய் வருவது அரிதானது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கைக்கடிகாரம் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என யோசிக்கவே அச்சமாக இருக்கிறது” என்றார். இந்நிலையில் சிறுமி இமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை அப்பிள் கைக்கடிகாரங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இதில் பல வசதிகளையும் அளித்திருக்கிறார்கள் நிறுவனத்தினர். இதற்காகவே, இந்த கைக்கடிகாரங்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர்.