
கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல்லை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சித்திகா சேனாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் அதிகாரத்தை இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு வழங்கினால் கோதுமை மாவின் தரம் குறித்து பரிசோதிக்க முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் தரம் தொடர்பில் இலங்கை தர நிர்ணய நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தையில் காணப்படும் கோதுமை மா பாவனைக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் நேற்று (25) கொழும்பில் தெரிவித்தார்.
கோதுமை மாவின் தற்போதைய தரநிலை குறித்து இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கோதுமை மா மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய மாவு தொடர்பில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் உணவக உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல பொது அமைப்புகளும் கலந்து கொண்டன.