இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்குள் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் (26.10.2022) பதிவாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய அலுவலக அதிகாரி அண்மையில் பருத்தித்துறை சாலை முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு பருத்தித்துறை சாலையின் பெரும்பாலான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் வடபிராந்திய போக்குவரத்து சபையின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் அவர் நேற்று (26.10.2022) கொழும்பு அலுவலகத்துக்கு அறிவித்துவிட்டு, மூத்த வடபிராந்திய முகாமையாளருக்கு அறிவிக்காமல் பருத்தித்துறை சாலைக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் அவருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறிய நிலையில் முகாமையாளர் மற்றும் அவருக்கு ஆதரவான நால்வர் உள்ளிட்ட 11 பேர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரையும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் நேற்று (26.10.2022) பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில் இதன்போது வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்கள் 11 பேரையும் எச்சரித்து, பிணையில் விடுவிக்க கட்டளையிட்டுள்ளார்.