“எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றியடையும். தேர்தலில் தோல்வியடைந்த சரித்திரம் எமது கட்சிக்கு இல்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம் ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை புத்தளம் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு இல்லை. எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
இனம், மதம் என நாட்டு மக்கள் வேறுபட்டு நின்று செயற்பட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடி தீவிரமடையுமே தவிர குறைவடையாது.
இதன் காரணமாகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ‘மீண்டும் ஒன்றிணைந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் கட்சி மாநாட்டை நடத்துவதற்குத் தீர்மானித்தது.
பொருளாதார பாதிப்பு சகல தரப்பினருக்கும் தாக்கம் செ லுத்தியுள்ளது. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பொறுப்புடன் செயற்பட்டது. நாட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கினோம் என்பதை உறுதியுடன் குறிப்பிட முடியும்”என கூறியுள்ளார்.