
நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த தனியார் பேருந்தின் சாரதி உட்பட பலர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வீதியின் வளைவுக்கு அருகிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டு பேருந்துகளும் அதிவேகமாகச் செலுத்தப்பட்டதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டு பேருந்துகளிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குழுவொன்று இருந்ததாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.