கொழும்பு கோட்டையில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் வரை பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
முன்னதாக, பேருந்துகள் விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் ஊடாக பயணித்து புறப்படும் மற்றும் வருகை முனையங்களைக் கடந்து மீண்டும் பிரதான வீதியில் வெளியேறும்.
இதன் மூலம் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்வோர், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகளை இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.
ஆனால் பிரதான நுழைவாயில் வரை பேருந்து சேவையை மட்டுப்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தை பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
பொருட்களுடன் பிரதான வீதிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதனால் பயணிகள் கடும் நெருக்கடியை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த தூரத்தை வாடகை வாகனம் மூலம் பயணிக்க முடியும் என்றாலும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் விமான நிலையத்திற்கு செல்வோர் மற்றும் வருவோர் பெரும்பாலும் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.
அதேநேரம் இந்த பேருந்து சேவையை பிரதான நுழைவாயில் வரை மட்டுப்படுத்தியமைக்கான காரணம் குறித்து மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடம் வினவப்பட்டது. விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் தலைவரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.