தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான சுற்றுநிருபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளக் காலப்பகுதியில் வெதுப்பக உற்பத்திகளை விநியோகிப்பதற்காக நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான வியாபார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வழக்கமான கிளினிக் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகளுக்காக வீடுகளுக்குச் சென்று கண்காணிக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார், கிராமசேவகர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் உதவியுடன் உள்ள10ராட்மன்றங்களின் சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே திறந்திருக்கும் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்லைன் வங்கி சேவைக்கு ஊக்குவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் எவ்விதத் தடையும் இல்லை.