இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பிரதேச மக்கள், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் உறவினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை பூர்த்திசெய்யுமாறு வலியுறுத்தியும் இது தொடர்பிலான கத்தோலிக்க திருச்சபையின் கடிதத்துக்கு தெளிவாக பதிலளிக்குமாறும் வலியுறுத்தினர்.
‘ஜனாதிபதி! திமிர் வேண்டாம்!’, ‘மறைக்கப்பட்ட சோஜித் யார்’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தீப்பந்தங்கள் மற்றும் கறுப்புக் கொடிகளை ஏந்தியாவறும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துரைக்கையில், நீர்கொழும்பு மக்கள், சமூக மற்றும் சமாதான அமைப்பு, ஏப்ரல் 21 நியாயக் கோரிக்கைக்கான நிதியம் ஆகியன இணைந்து இன்று இந்த கறுப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு, அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் பதிலளித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைக்கு முறையாக பதிலளிக்குமாறும் வலியுறுத்தியுமே நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
நாட்டில் மக்கள் உயிரிழப்பதுத் தொடப்பிலும் காணாமல் போவதுத் தொடர்பிலும் ஒருவரும் கருத்திற்கொள்வதில்லை.
71,83,89 ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்த காலத்தை எடுத்துப் பார்க்கும்போது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மரணித்துள்ளனர் அதேபோன்று காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுத் தொடர்பில் இதுவரை தெரியவில்லை.
அதேபோன்று நாட்டின் தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ, விஜேகுமாரதுங்க, லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க அதேபோன்று இராணுவத்திலிருந்த கொப்பேகடுவ ஆகியோரின் மரணங்கள் தொடர்பிலும் இந்த நாட்டில் யாரும் கேட்வில்லை.
எனினும் கட்டுவாப்பிட்டிய, கொச்சிக்கடை, மட்டக்களப்பு ஆகிய தேவாலங்களில் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாம் கைவிடப்போவதில்லை.