மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீனாக்கேணி ஆகிய கிராமங்களில் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கடற்றொழில் நிமித்தம் வருகை தருகின்ற வேறு பிரதேசங்களைச் சேர்ந்தோரினால் ஏமாற்றப்பட்டு தமது வாழ்வை இழந்து நிர்க்கதியான நிலையில் காணப்படும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்கல், மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வழி செய்தல், பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல், மற்றும் அக்குடும்பங்களின் ஜீவனோபாயவழிமுறைகளை ஆராய்தலும் நெறிப்படுத்தலும் போன்ற செயற்றிட்டம் நேற்றைய தினம் Sivanarul foundation நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் டென்மார்க்கிலிருந்து வருகை தந்த புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் திருமதி சுபாசினி திசரூபன் அவர்களும் அவரது கணவரும் பாட்டாளிபுரம் மற்றும் நல்லூர் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கான குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் திருமதி காளீஸ்வரி அவகளும் சிவனருள் பவுண்டேசன் நிறுவனத்தின் மூதூர் கிழக்குப் பிரதேச திட்ட ஆலோசகரும் ஓய்வு நிலை அதிபருமான திருமதி உமா ரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.ஏற்கனவே சிவனருள் பவுண்டேசன் நிறுவனம் குறித்த பிரதேசத்தில் இலவச மாலை நேர வகுப்புக்கள் தற்காலிக வீட்டுத்திட்டங்களை வழங்குதல் போன்றவற்றுடன் அறநெறி வகுப்புக்கள் ஆலயப் புனர் நிர்மாண வேலைத்திட்டங்களூடாக திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் சைவ சமயப் பாரம்பரியங்களை மீள நிறுவும் வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.