13 திருத்தச்சட்டத்திற்க்கு உட்பட்ட. மாகாணசபை தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க எந்த வகையிலும் போதுமானதல்ல என யாழ்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரிடம் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் நேற்றைய தினம் நேரடிய தெரிவித்துள்ளது.
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்திற்க்கும் இந்திய துணைதூதரகத்திற்க்கும் இடையில் நேற்று காலை 11 மணியளவில் இடம் பெற்ற சந்திப்பிலேய அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக விஞ்ஞான ஆய்வுமையம் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை உருவாக்கி அதப்புக்கள்னை மக்கள் முன் கொண்டுசெல்வதற்காக 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கடந்த ஆறு வருடங்களாக பின்வரும் பணிகளை அது மேற்கொண்டு வருகின்றது.
1. சிறு நூல்கள் வெளியிடுதல் இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன.
2. “எழுகை நியூஸ்” என்னும் இணையத்தளத்தினை நடாத்துதல்.
3. ஆவணக் காப்பகம் ஒன்றை நடாத்துதல்.
4. வறிய கிராமங்களில் கல்வித் திட்டங்களை உருவாக்கி செயற்படுத்துதல்.
5. கிராமங்களில் வீட்டுப் பயிற்செய்கைத் திட்டத்தை முன்னெடுத்தல்.
6. பொது அமைப்புக்களை இணைத்து ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குதல்.
இத் திட்டங்களை சிறப்பாக மேற்கொள்வதற்கு தங்கள் ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்.
2. அரசியல் தீர்வு –
இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதே! அதாவது தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பன அழிக்கப்படுவதே! எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்த இன அழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும் என நாம் கருதுகின்றோம்.
இந்த அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில் தேசிய இன அங்கீகாரம், இறைமை அங்கீகாரம் சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்துகின்ற ஆட்சிப் பொறிமுறை என்பவற்றை கொண்டிருத்தல் வேண்டும் என கோருகின்றோம்.
இது அரசியல் யாப்பு சட்ட வடிவில் தமிழர் தாயக ஒருமைப்பாட்டை பேணுகின்ற வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுய நிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் தேசிய இனமாக பங்குகொள்வதற்கான பொறிமுறை, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும் எனவும் விரும்புகின்றோம்.
இணைந்த வடக்கு – கிழக்கில் முஸ்லீம் மக்களின் வகிபங்கு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பது தொடர்hக அவர்களுடன் பேசுவதற்கும் தமிழ் மக்கள் தயாராக உள்ளனர். அவர்கள் முன்வைக்கும் தனி அதிகார அலகுக் கோரிக்கையை பரிசீலிப்பதற்கும் தயாராக உள்ளனர்.
முஸ்லீம்கள் இணைப்புக்கு சம்மதிக்காவிட்டால் வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களை நிலத்தொடர்சியற்ற வகையிலாவது இணைத்து (பாண்டிச்சேரி மாநிலம் போல) தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பேணலாமா? என்றும் யோசித்து வருகின்றோம்.3. ஜெனிவாவிற்கான இந்தியப் பிரதிநிதியின் கருத்துக்கள்
ஜெனிவாவிற்கான இந்தியப் பிரதிநிதி இனப்பிரச்சினைக்கான தீர்வும,; பொருளாதார நெருக்கடித் தீர்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நோக்கி இலங்கை அரசு நகர வேண்டும் என்ற கருத்துக்களை தனது வழமையான கருத்துக்களுக்கு மேலதிகமாக முன்வைத்துள்ளார். தமிழ் மக்களின் மீது வலுவான அக்கறையுடன் முன்வைக்கப்பட்ட இக் கருத்துக்களை நாம் வரவேற்கின்றோம். தமிழ் மக்கள் சார்பில் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.4. 13வது திருத்தம்
13வது திருத்தம் ஒற்றையாட்சிக்குட்பட்ட, மத்திய அரசில் தங்கி நிற்கின்ற மாகாணசபை முறையை சிபார்சு செய்துள்ளது. இது தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க எந்த வகையிலும் போதுமானதல்ல என்றே நாம் கருதுகின்றோம். தற்போது வெட்டிக் குறைக்கப்பட்ட 13வது திருத்தமே நடைமுறையில் உள்ளது. இது அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூட கொள்வதற்கு தகைமை கொண்டதல்ல என்பதே எமது கருத்தாகும்.
13வது திருத்தத்தை அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாக கொள்வதாயின் அதற்குப் பின்வரும் திருத்தங்கள் அவசியம் என்றும் கருதுகின்றோம்.
1. இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்ற 2ம் உறுப்புரையை திருத்துதல். ஒன்றியக் குடியரசு என அதனை மாற்றுதல்.
2. தாயக ஒருமைப்பாட்டைப் பேணும் வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்தல். குறைந்தபட்சம் நிலத்தொடர்ச்சியற்ற வகையிலாவது தமிழ்ப் பிரதேசங்களை இணைத்தல்.
3. பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை துறத்தலோ, பராதீனப்படுத்தலோ ஆகாது என்ற அரசியல் யாப்பின் 76வது உறுப்புரையைத் திருத்துதல்.
4. ஒத்தியங்கு பட்டியலை நீக்கி அதன் அதிகாரங்களை மாகாணசபை நிரலுக்கு கொண்டுவருதல்.
5. மகாணசபை நியதிச் சட்டங்களை இயற்றுவதற்கு தடையாக உள்ள ஆளுநர், சட்டமா அதிபா,; உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களை அகற்றுதல்.
6. ஆளுநரின் அதிகாரங்களை நீக்கி அவற்றை முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவையிடம் ஒப்படைத்தல்.
7. கூட்டு அதிகாரத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக பங்குபற்றுவதற்குரிய பொறிமுறையை உருவாக்குதல்.
8. மாகாணசபை நிரலிலுள்ள விடயங்களில் சட்டம் இயற்றுவதற்கு பாராளுமன்றம் சட்டத்தை இயற்றிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை இல்லாதொழித்தல்.
9. நீதித்துறையையும் அதிகாரப் பங்கீட்டிற்கு உள்ளாக்கி மாகாண நீதித் துறையை உருவாக்குதல்.
10. மாகாணசபையின் அதிகாரங்கள் மீளப் பெறப்படாத வகையில் வலுவான யாப்பு பொறிமுறையை உருவாக்கல்.
5. ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல். –
2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறீலங்கா அரசினால் பச்சை ஆக்கிரமிப்புக்கள் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது ஆக்கிரமிப்புக்கு பிரதானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே! தமிழ் மக்களின் உறுதிகள் வைத்திருந்த காணிகள் கூட பறிக்கப்படுகின்றன. போரினால் படுமோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இதனால் மிகுந்த கவலைக்கும் துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனபிரிபாலனத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், பௌத்தசாசன அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு என்பன கூட்டாக இணைந்து இவ் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்கின்றன.
இந்த ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தும் வகையில் சிறீலங்கா அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். திருக்கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் இந்தியத் தூதுவர் தலையிட்டதன் பின்னர் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழர் தாயகத்தின் ஏனைய இடங்களில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகளையும் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதோடு படையினர் பறித்த காணிகளை மீளப் பெறுவதற்கும் அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகின்றோம்.
6. அரசியல் கைதிகளின் விடுதலை –
தமிழ் அரசியல் கைதிகள் 50 பேர்வரை சிறையில் இருக்கின்றனர். அவர்களில் 34 பேர் 10 வருடம் தொடக்கம் 28 வருடம் வரை சிறையில் இருக்கும் நீண்ட காலக் கைதிகள் ஆவர். மீதிப்பேர் 2009க்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர். போர் முடிந்தவுடன் நல்லிணக்கத்துக்கான சைகையாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே வழக்கம். இலங்கையில் அது இடம்பெறவில்லை. எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தங்களையும் இந்திய அரசு கொடுக்க வேண்டுமென வேண்டுகின்றோம்.
7. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் –
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக தமிழ் மக்கள் பரிகார நீதியினையே கோரியிருந்தனர் ஆனால் சர்வதேச சமூகம் நிலைமாறுகால நீதியினையே சிபார்சு செய்திருந்தது. இந்த நிலைமாறுகால நீதி உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்கின்ற நான்கு செயல் திட்டங்களை உள்ளடக்கியது. இதில் நான்காவது அரசியல் தீர்வுடன் தொடர்புடையது ஏனைய மூன்றும் நீதி வழங்கலுடன் தொடர்புடையவையாகும். இந்த நீதி வழங்கல் செயற்பாட்டில் உள்நாட்டு பொறிமுறைகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. சர்வதேச பொறிமுறையையே அவர்கள் கோரி நிற்கின்றனர். எனவே சர்வதேச பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்திய அரசும் உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கின்கின்றோம்.
8. இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோருதல் –
கட்டமைப்புசார் இன அழிப்பு என்பது ஒரு தேசிய இனத்தின் இருப்புக்கு ஆதாரமாக இருக்கின்ற நிலம் மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பவற்றை அழிப்பதாகும். இதன் உச்ச வடிவமே உயிர் அழிப்பாகும். முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் உயிர் அழிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா செயற்பாடு தொடர்கின்றது. இந்த செயற்பாடு மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச தீர்ப்பாயம், நாடுகளின் உள்ளக நீதிப்பொறிமுறை என்பன நோக்கி வளரவேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இந்திய அரசின் ஒத்துழைப்புக்களையும் வேண்டுகின்றோம்.
9. தமிழர் தாயகத்தை அபிவிருத்தி செய்தல் –
தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி நீண்ட போர் காரணமாக 50 வருடம் பின்தங்கி இருக்கின்றது. விவசாயம், கடல்தொழில், கைத்தொழில் என பல தொழில்களிலும் அபிவிருத்தி தேவையாக உள்ளது. இந்த அபிவிருத்திகளில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டுமென தமிழ் மக்கள் விரும்புகின்றனர். அந்த அபிவிருத்தி செயற்பாடுகளை தமிழ் மக்களையும் இணைத்துக்கொண்டு முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம். தமிழர் தாயகத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் இதற்காக ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்கின்றனா.
10. தமிழக மக்களுடனான உறவினை இலகுவாக்கல் –
போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தமிழர் தாயகத்திற்கும், தமிழகத்திற்குமிடையே தலை மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து இருந்ததினால் தமிழகத்திற்கான பயணம் இலகுவாக இருந்தது. தாயக மக்கள் தமது கல்வி, ஆன்மீக தேவைகளை இலகுவாக பூர்த்திசெய்யக்கூடியதாக இருந்தது. இந்தப் பயண வழியை மீண்டும் இலகுவாக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். இது விடயத்தில் மீண்டும் தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்தையும், காங்கேசன்துறை – தூத்துக்குடி படகு போக்குவரத்தையும் ஆரம்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பாக இந்திய அரசு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். சிறீலங்கா அரசு ஈழத் தமிழர் – தமிழக உறவு வளர்ந்துவிடும் என்பதற்காக திட்டமிட்டு விமான நிலையம் இயங்குவதை தடுத்து வருகின்றது. விமான நிலையத்தில் இருந்த தளபாடங்களும் அம்பாந்தோட்டை “மத்தள” விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் இயங்குவதற்கு ஆவண செய்யுமாறு தாழ்மையாக வேண்டுகின்றோம். என்றுள்ளது.