கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை, இரண்டாவது அலைகளில் தற்பெருமை காட்டி தற்போது மரணத்தை நோக்கி செல்கின்றார்கள். நாம் அனைவரும் வாழ்க்கை திசையில் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பொறிமுறை வெற்றிகரமாக இருந்ததாக ஜனாதிபதி கூற முயற்சித்தார். ஆனால் தடுப்பூசி விவகாரம் வெற்றிகரமாக இல்லை. தடுப்பூசி போடப்பட்ட முதல் டோஸுக்கு இடையிலான இடைவெளி சுமார் 32 சதவீதமாகவுள்ளது. நம் நாட்டில் தடுப்பூசி அறிவியல் பூர்வமாக செய்யப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
நாடு தொடர்ச்சியாக மூடப்பட்டால் தியாகம் செய்ய தயாராக இருக்குமாறு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறுகிறார். நாடு மூடப்படும்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது. அவர் சம்பளம் கொடுக்க முடியாது என்றவாறு தான் கூறினார்.
ஆடைத் தொழிற்றுறையால் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைப்பதாக ஜனாதிபதி கூறினார். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, ஆடைத் தொழிற்சாலையை அறிமுகப்படுத்தியபோது சிரித்தார்கள். ஆனால், இன்று அந்தத் தொழிற்றுறை ஒரு முதலீடாக இருக்கிறது. நமது பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொடுப்பதாக ஜனாதிபதியின் உரையிலிருந்தே தெரிகிறது.
200 உடற்பயிற்சி நிலையங்களை ஆரம்பிப்பதற்கு ஓர் அமைச்சரவை பத்திரத்தை கொண்டு வந்தததற்குப் பதிலாக 200 அவசர சிகிச்சை பிரிவுகளை கட்டியிருந்திருக்கலாம். புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது, ஒரு புதிய மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கு பணத்தை ஒதுக்கியிருக்கலாம்.
இந்தவாரம் 146 வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தி அம்பியுலன்ஸ்களை இறக்குமதி செய்திருக்கலாம். தேவையற்ற முதலீடுகளுக்காக இந்த அரசாங்கம் பணத்தை ஒதுக்கியுள்ளது.
சீனியின் வரியை மாற்றி பணத்தை திருடியவர்கள் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால், தடுப்பூசிகளை கொண்டு வந்திருக்கலாம்.
நாட்டில் பணத் தட்டுப்பாடு இருந்தால், பணம் வாங்கக்கூடிய இடங்கள் உள்ளன. அப்பாவி பொது ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்தைக் கேட்கிறோம்.
ஆசிரியர்களால் தான் தற்போதைய கொரோனா அலை ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளாததால்தான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. ஆசிரியர் கொத்தணி, அந்த கொத்தணி இந்த கொத்தணி என்று பெயரிட முயற்சிக்கின்றனர்.
அதற்கு முன் கொரோனா சமூகமயமாகிவிட்ட என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையான புள்ளிவிவரங்கள் வழங்கப்பட வேண்டும். உண்மையைச் சொல்லும் வரை இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க முடியாது.