
இலங்கையின் நாடாளுமன்றில் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கூடுகின்றனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இந்த விடயம் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சுயாதீனக்குழுக்களின் உறுப்பினர்கள்,அரச பதவிகளுக்கான நியமனங்களை அங்கீகரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.
சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அதிகாரபூர்வ உறுப்பினர்கள் ஆவர். இதேவேளை, அரசியலமைப்பு பேரவைக்கு தனது வேட்பாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையானது அரசாங்கத்தின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால், பரிந்துரைக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு உறுப்பினர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உடன்படிக்கையுடன் சபாநாயகரால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேரையும் உள்ளடக்கியிருக்கும்.