அளுத்கமை தர்கா நகரில் உள்ள சிறிய சிறப்பு அங்காடியில் காசாளராக தொழில் புரிந்து வந்த யுவதி சுமார் 12 லட்சம் ரூபா பணத்தை மோசடியான முறையில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக சிறப்பு அங்காடியின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நடத்திய விசாரணைகளை அடுத்து சந்தேக நபரான 18 வயதான யுவதியை கைது செய்ததாக அளுத்கமை பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த வர்த்தகருக்கு தர்கா நகர் மற்றும் அளுத்கமை ஆகிய இடங்களில் சிறப்பு அங்காடிகள் இருப்பதாகவும் தர்கா நகரில் உள்ள அங்காடியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்கா நகரை சேர்ந்த யுவதியே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபரான யுவதி ஒரு மாதத்திற்குள் அவ்வப்போது இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளார். அத்துடன் கொள்ளையிட்ட பணத்தில் 7 லட்சம் ரூபா பணத்தை திரும்பிக்கொடுள்ளார்.
சந்தேக நபரான யுவதி, பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவ்வப்போது கொள்ளையிட்டு, தனது வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நம்பிக்கை துரோகம் மற்றும் கொள்ளையடிப்பு ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யுவதி நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
சம்பவம் தொடர்பாக அளுத்கமமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.