
எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பருத்தித்துறை – புலோலி கமநல சேவை முற்றத்திலிருந்து இன்று (08.11.2022) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
விவசாயிகளின் அடிப்படை தேவையான மண்ணெண்ணெய் மற்றும் உரம், மருந்துவகை உட்பட்ட உள்ளீடுகளை வழங்க கோரியே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்புப் போராட்டமானது பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று அங்கு யாழ். மாவட்ட செயலருக்கான மனு ஒன்றினை பருத்தித்துறை பிரதேச செயலரிடம் வழங்கி வைத்ததுடன் போராட்டம் நிறைவிற்கு வந்துள்ளது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுக்காதே மறுக்காதே மண்ணெண்ணையை மறுக்காதே, வழங்கு வழங்கு உரத்தினை வழங்கு, அடிக்காதே அடிக்காதே ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, ரணில் பொதுஜன பெரமுன அரசே உரம் கிருமி நாசின்களை போதியளவு கிடைக்க வழி செய், பல கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதில் வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட விவசாய அமைப்பு பிரதிநிதிகள், பருத்தட்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார், முன்னாள் மாகாண சபை உருப்பினர் ச.சுகிர்தன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சதீஸ், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் சுரேஸ் உட்பட்ட பல அரசியல் கட்சி உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி கலந்து கொண்டதுடன் விவசாயிகளுடன் கடற்தொழிலளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.