இலங்கை மிக மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது. ஜூனில் 17 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்ட நிலையில், தற்போது அது 34 இலட்சமாக அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இவ்வாறு மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களுக்கு உணவளிக்க 790 இலட்சம் டொலர்கள் திரட்டப்பட்டன. ஆனால், ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேலும் 700 இலட்சம் டொலர்கள் தேவைப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐ. நா. முகவரகங்கள் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் சனத்தொகை 220 இலட்சமாகும். இதில், ஜூன் மாதத்தில் 17 இலட்சம் மக்களுக்கு உதவி தேவைப்பட்டது. தற்போது இது 34 இலட்சமாக அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.