இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த போது, தன்னை சில முறை மூச்சடைக்க செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக சிட்னி நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தகவல்களுக்கு அமைய, சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் தனுஷ்க குணதிலக்க பலவந்தமாக பாலியல் ஸ்பரிசம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் அப்போது, அவர் பெண்ணின் கழுத்தில் ஒரு கையை வைத்து 20 முதல் 30 வினாடிகள் கழுத்தை இறுக்கினார் என கூறப்பட்டுள்ளது.
இந்த பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக பெண் துஷ்பிரயோக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
நேற்று நடைபெற்ற தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு தொடர்பாக சிட்னி மோர்னிங் ஹெரல்ட் பத்திரிகை இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு சம்பந்தமான விடயங்களை பகிரங்கப்படுத்த சிட்னி நீதவான் நேற்று ஊடகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டை அடுத்து தடை நீக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
பெண்ணின் அனுமதியின்றி பாலியல் வன்புணர்வு செய்தமை உட்பட நான்கு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள தனுஷ்க குணதிலக்க நேற்று காணொளி தொழிற்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதன் போது வன்புணர்வு நடந்த விதம் தொடர்பான முழுமையான அறிக்கைகயை பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த முழு அறிக்கையை சிட்னி மோர்னிங் ஹெரல்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளின் போது முறைப்பாட்டாளரான பெண் முன்வைத்துள்ள சில விடயங்களை தனுஷ்க குணதிலக்க ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் பலவந்தமாக, பெண்ணின் விருப்பமின்றி சம்பவம் நடந்தது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
அதேவேளை தனுஷ்க குணதிலக்க சார்பில் கடந்த திங்கள் கிழமை முன்னிலையான சட்டத்தரணி ஆனந்த அமரநாத், வழக்கில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக தனுஷ்க குணதிலக்க சார்பில் பெரிஸ்டர் சேம் பரராஜசிங்கம் மற்றும் சொலிசிட்டர் சாரா பிளேக் ஆகியோர் முன்னிலையாகினர்.