கல்வியை இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், ஊதிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி இணையவழி சைபர் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாகப் பொது வெளியில் போராட்டங்கள் தடுக்கப்பட்டாலும், எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் எனப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
“இது போன்று எங்கள் நடவடிக்கைகள் முன்னோக்கி நகர்கின்றன. இந்தப் பிரச்சினையை இழுத்துக்கொண்டிருக்காமல் தீர்வைப் பெற்றுத்தருமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்” எனச் சிரேஷ்ட ஆசிரியர் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களும் தங்களால் இயன்றவரை இணையப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க கேட்டுக்கொண்டார்.
“கவிதைகள் எழுத முடியும், பாடல்களை எழுத முடியும், கவிதைகள், பாடல்களைப் பாட முடியும், கேலிச்சித்திரங்களை வரைய முடியும். உங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இணையுங்கள்” ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவைப் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊதிய பற்றாக்குறை பிரச்சினையை முன்னிறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக வீதியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி ஆகஸ்ட் 18ஆம் திகதி அமைச்சரவை உப குழுவைச் சந்தித்தது. சுபோதனி சம்பள அறிக்கையைத் தவிர வேறு ஏதேனும் முன்மொழிவுகள் காணப்படுகின்றதா என அரசாங்க உபகுழு தொழிற்சங்கங்களைக் கேட்டிருந்தது.
அனைத்து ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்கங்களும் ஏகமனதாக சுபோதனி சம்பள முன்மொழிவைத் தவிர வேறு எந்த முன்மொழிவும் இல்லை எனவும், ஆசிரியர்களுக்காக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட சுபோதனி சம்பள முன்மொழிவை அமுல்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தன.
இந்த விடயங்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கவும், செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தவும் அமைச்சரவை உபகுழு ஒப்புக்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர ரணவீர தெரிவித்துள்ளார்.