இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகலரத்நாயக்காவை இரசகியமாக புது டில்லிக்கு இலங்கை ஜனாதிபதி அனுப்பி வைத்தார். அதுவும் வெற்றியளிக்கவில்லை. சாகலரத்நாயக்காவினால் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய்மோகன் குவாத்ராவையும் உயர் அதிகாரிகளையும் மட்டுமே சந்திக்க முடிந்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைக் கூட சந்திக்க முடியவில்லை. கடன் மறுசீரப்பு, இலங்கை ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் சந்தித்தல் என்கின்ற இரு விவகாரங்களுக்கு முயற்சிகளைச் செய்த போதும் தெளிவான பதில் எவற்றையும் இந்தியா வழங்கவில்லை.
இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்தமொரகொட பொருளாதார ரீதியான உறவுகளை இந்தியாவுடன் வலுவாகப் பேணுவதன் மூலம் தமிழர் விவகாரத்தை ஓரம்கட்டலாம் என நினைக்கின்றார். அதற்காக பழைய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ரத்துச்செய்து புதிய உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கும் முயற்சிசெய்தார். இந்திய ஊடகங்களுக்கும் இது தொடர்பாக நேர்காணல்களை வழங்கினார். ஆனால் இந்திய அரசதரப்பு அதற்கான இணக்கங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
மிலிந்தமொரகொடவின் விருப்பங்களுக்கு இந்தியா சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளி உறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்ய வெண்டும். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளி உறவுக் கொள்கையில் முக்கிய விடயம் இலங்கையின் இறைமை ஆள்புல மேன்மை என்பன பேணப்படுவதோடு தமிழ் மக்களின் சமத்துவம், சமாதான வாழ்வு என்பனவும் பேணப்பட வேண்டும் என்பதாகும்
இந்தியாவின் இந்தக் கருத்து நிலை வளர்ச்சி ஒரு சுய நிர்ணய சமஸ்டி வரை இந்தியா செல்லக் கூடிய வாய்ப்புக்களை திறந்து விட்டுள்ளது. தமிழ் மக்கள் அவதானமாக கவனிக்க வேண்டிய புள்ளி இது தான். இந்தக் கருத்து நிலையை நோக்கி இந்திய – இலங்கைத் தமிழ் உறவுகளை எவ்வாறு வளர்த்துச் செல்வது என்பது பற்றி அதிக கவனம் செலுத்துவது இன்றைய நிலையில் ஆரோக்கியமான பணியாக இருக்கும்.
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினர் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகில் முஸ்லீம்களின் வகிபாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக முஸ்லீம்களுடன் பேசித்தீர்க்கலாம் என்றும் முஸ்லீம்கள் முன் வைக்கின்ற தனி அதிகார அலகுக் கோரிக்கையையும் சாதகமாக பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டனர். முஸ்லீம்கள் இதற்கும் சம்மதிக்கா விட்டால் வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது இணைத்து வடக்கு – கிழக்கு இணைப்பை பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறினர்.
இரண்டாவது 13 வது திருத்தம் பற்றியதாகும்.13 வது திருத்தம் ஒற்றையாட்சிக்குட்பட்ட, மத்திய அரசில் தங்கி நிற்கின்ற, எந்த வித சுயாதீனமுமற்ற மாகாணசபை முறையினையே சிபார்சு செய்துள்ளது என்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு இது எந்த வகையிலும் போதுமானது அல்ல என்றும் குறிப்பிட்டனர். தற்போது வெட்டிக்குறைக்கப்பட்ட 13 வது திருத்தமே நடைமுறையில் உள்ளது. இது அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக கூட கொள்வதற்கு தகைமை அற்றது என்றும் குறிப்பிட்டனர்.
13 வது திருத்தத்தை அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாகக் கொள்வதாயின் அதற்குத் திருத்தங்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்தினர். குறிப்பாக இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்ற அரசியல் யாப்பின் இரண்டாம் உறுப்புரையை நீக்குதல், பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை துறத்தலோ பராதீனப்படுத்தலோ ஆகாது என்ற அரசியல் யாப்பின் 76 வது உறுப்புரையை நீக்குதல், வடக்கு கிழக்கு இணைப்பை, உறுதிப்படுத்தல், ஒத்தியங்கு பட்டியலை நீக்கி அதனை மாகாணசபை நிரலில் சேர்த்தல். மாகாணசபை நியதிச்சட்டங்களை இயற்றுவதற்கு தடையாக உள்ள ஆளுநர், சட்டமா அதிபர் , உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களை அகற்றுதல், ஆளுநரின் அதிகாரங்களை நீக்கி அவற்றை முதலமைச்சரை தலைவராகக் கொண்ட மாகாண அமைச்சரவையிடம் ஒப்படைத்தல், கூட்டு அதிகாரத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக பங்கு பற்றுவதற்குரிய பொறிமுறையை உருவாக்குதல், மாகாணசபை நிரலில் உள்ள விடயங்களில் சட்டம் இயற்றுவதற்கு பாராளுமன்றம் சட்டத்தை இயற்றிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை அகற்றுதல், நீதித்துறையும் அதிகாரப்பங்கீட்டிற்கு உள்ளாக்கி மாகாண நீதித்துறையை உருவாக்குதல், மாகாணசபையின் அதிகாரங்கள் மீளப்பெறப்படாத வகையில் வலுவான யாப்புப் பொறிமுறையை உருவாக்குதல் என்கின்ற திருத்தங்கள் அவசியம் எனவும் வலியுறுத்தினர்.
மூன்றாவது ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதாகும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து பச்சை ஆக்கிரமிப்புக்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இது பெரும் எடுப்பில் இடம்பெறுகின்றது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், பௌத்தசாசன அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு என்பன இதில் கூட்டாக செயற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி இவ் ஆக்கிரமிப்புக்களை நிறுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரினர்.
ஐந்தாவது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமாகும். இது விடயத்தில் தமிழ் மக்கள் பரிகார நீதியையே கோரியிருந்தனர். ஆனால் சர்வதேச சமூகம் நிலைமாறுகால நீதியையே சிபார்சு செய்தது. இந்த நிலைமாறுகால நீதி உண்மையை கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்ற நான்கு செயல் திட்டங்களை உள்ளடக்கியது. இதில் நான்காவது அரசியல் தீர்வுடன் தொடர்புடையது. ஏனைய மூன்றும் நீதி வழங்கலுடன் தொடர்புடையன. இந்த நீதி வழங்கல் செயற்பாட்டில் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. சர்வதேச பொறிமுறையையே அவர்கள் கோருகின்றனர். எனவே சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் உதவவேண்டும் என கோரப்பட்டது.
ஆறாவது தமிழர் தாயகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவவேண்டும் எனக் கோரப்பட்டது. அந்த அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ் மக்களையும் இணைக்கவேண்டும் என்றும் குறிப்பாக உள்ளுராட்சிச் சபைகளை இணைப்பது ஆரோக்கியமானது என்றும் கூறப்பட்டது.
ஏழாவது தமிழக மக்களுடனான தாயக மக்களின் உறவினை இலகுவாக்குவதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் மீள செயற்படுத்துவதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும்; தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்தும், காங்கேசன் துறை காரைக்கால் படகு போக்குவரத்தும் உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனவும் கோரப்பட்டது.
அபிவிருத்தி செயற்பாடுகளில் தாம் மிகுந்த அக்கறை கொள்வதாகவும் இந்திய முதலீட்டாளர்களுடன் இது பற்றி பேசுவதாகவும் குறிப்பிட்டார். தான் இந்தியாவுக்கு செல்லும்போது முதலீட்டாளர்களை நேரடியாக சந்தித்து பேசப்போவதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மீளத் திறப்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்வதாகவும் ஜனவரி மாதமளவில் மீளத் திறப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளது எனவும் குறிப்பிட்டார். பெரிய விமானங்கள் இறங்குவதற்கு ஓடுபாதை போதியதல்ல. அது விரிவாக்கப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலதிகமாக தமிழ் விவசாயிகளின் மண்ணெண்ணை உரத் தேவை பூர்த்திசெய்வதற்கு தான் முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டார். மாணவர்களின் கல்வி விடயத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்றும் ஆனால் தமிழ் மாணவர்களின் அக்கறை குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் ஆரோக்கியமான கலந்துரையாடலாக இது இடம்பெற்றது. தமிழ் சிவில் அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு தூதரகம் விரும்புகின்றது. தமிழ் சிவில் அமைப்புக்கள் இதனைக் கவனத்தில் எடுப்பது நல்லது.
https://fb.watch/gMMoNhCrH6/