முட்டை தட்டுப்பாட்டால் எதிர்வரும் மூன்று நாட்களில் நாட்டிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளை மூடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் மற்றும் உற்பத்தியாளர்கள் உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து பாரிய தொகை அபராதங்களை விதிக்கிறது.
இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு பிரச்சினைக்கு உற்பத்தியாளர்கள், அது சார்ந்த சங்கத்தினர் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் ஒன்றாக கலந்துரையாடி உடனடியாக உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இதேவேளை அரசாங்கத்தினால் முட்டைக்கான உச்சபட்ச சில்லறை விலை 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முட்டை விற்பனை செய்யாத வர்த்தக நிலையங்கள் தொடர்பில், தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்போது, தாம் முட்டைகளை 52 ரூபாய்க்கு மொத்த சந்தையில் பெற்றுக்கொள்வதால், அரசாங்கம் நிர்ணயித்துள்ள 50 ரூபா நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.”என கூறியுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், முட்டை தட்டுப்பாடு இருப்பதாக சிலர் காட்டிக்கொள்ள முயற்சிப்பதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி நுகர்வோர் அதிகாரசபையினர் சோதனை நடத்தியதுடன், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகள் பலர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.