பயணத்தின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என பொலிஸார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஒரு நபர் பணியில் இருந்தால், அந்த நபர் தொடர்பாக சரிபார்க்கப்பட வேண்டிய தகுந்த ஆவணங்களை வைத்திருப்பது முதலாளி மற்றும் பணியாளரின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திடமான முறையில் நின்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த கைது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த நபர் உரிய ஆவணங்களின்றி அடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் இருந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதை பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருகின்றமையினால் சந்தேகத்திடமான முறையில் செயற்படும் நபர்களை கைது செய்வதற்கு உரிமை உள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் முடிந்தளவு ஆவணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.