ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் சீ-விஜில் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியுள்ளதுடன் இன்று மாலை வரை நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதைத்தொடர்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியதுடன் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுவுள்ளது . இதில் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல்துறையை சேர்ந்த பல்வேறு பிரிவினர் இணைந்து ஒத்திகையை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடல் மற்றும் தீவு பகுதிகளில் இந்திய கடற்படையினர் கப்பல் மற்றும் ரோந்து படகுகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் கடலோர பாதுகாப்பு குழுமம் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு போலீசார் சிலர் மாறுவேடத்தில் ராமேஸ்வரம் கடலுக்குள் நுழைந்தனர். அவர்களை பிடிக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவர்களை கண்காணித்து படகுடன் மடக்கி பிடித்தனர். மரைன் போலீசார் பிடித்த மீன் பிடி விசைப்படகில் கமாண்டோ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றை சேர்ந்த 9 பேர் இருந்தனர்.
பின்னர் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் இருந்த 2 டம்மி குண்டுகளை கைபற்றி போலீஸ் ஜீப்பில் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.