
அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருவூலத்தில் இருந்து, தினசரி பணப்புழக்கத்தை கையாள்வது எவ்வளவு கடினம் என்பதை என்னால் பார்க்க முடிகின்றது. ஏனெனில் சம்பளம், மானியம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு கூட இந்த வருமானம் போதுமானதாக இல்லை.
இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்தின் செலுத்தப்படாத உண்டியல்களின் பெறுமதி சுமார் 200 பில்லியன் ரூபாவாகும். குறிப்பாக கட்டுமானம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பில்களும் அவற்றில் அடங்கும். அரசாங்கத்தால் அந்த பில்களை செலுத்த முடியவில்லை.
இந்த பின்னணியைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் வருமானத்தை ஈட்டுவதற்காகவே புதிய நிதி மற்றும் வரிக்கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமையவே, வரவு செலவுத் திட்டத்தில் நிர்வாகத்தை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.