இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவிகளை வழங்கப்போவதில்லை. கடன்களை தரப்போவதும் இல்லை. நிதி உதவிகளின் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்றே நாம் கருதுகின்றோம் எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சொங்டியன், மாறாக பாரியளவிலான முதலீடுகளை செய்யும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்றார்.
சகல நாடுகளின் முதலீடுகளையும் பெற்றுக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென தெரிவித்துள்ள லின் சொங்டியன், எம்மிடம் பலமான முதலீட்டாளர்கள் உள்ளனர். சிறந்த நிறுவனங்கள் உள்ளன. அவர்களுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்க எம்முடன் கைகோருங்கள் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை -சீன நட்புறவு குறித்து கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த ஒழுக்கமுறைகளை கொண்ட நாடாகவே இலங்கை காணப்படுகின்றது. இது குறித்து நாம் பெருமைப்படுகின்றோம். 1950களிலும் அதன் பின்னரும் தொடர்ச்சியாக நாம் இலங்கைக்கு வருகை தந்துள்ளோம். ஒரு நாட்டை எவ்வாறு வர்த்தக பொருளாதாரத்துக்குள் கொண்டு நகர்த்துவது என்பதை இலங்கையிடம் கற்றுக்கொள்ள நாம் இங்கு வந்தோம் என்றார்.
அதேபோல் சிங்கப்பூரும் உங்களிடம் கற்றுக்கொள்ளவே இங்கு வந்தது. சீனாவை உலகுடன் இணைப்பது எவ்வாறு என்பதை நாம் சிங்கப்பூரிடம் கற்றுக்கொண்டோம். அதேபோல் இலங்கை- சீன நட்புறவானது நீண்டகாலமாக கையாளப்பட்டு வருகின்றது என நினைவூட்டினார்.
உலகில் 20 மில்லியன் மக்கள் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் மட்டுமல்ல இலங்கையுடனும் இணைந்து பணியாற்ற நாம் விரும்புகின்றோம் என்றார்.
கொழும்பு துறைமுக நகரானது இந்த நாட்டின் நம்பிக்கை என்றே நாம் கருதுகின்றோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை புதுப்பிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும், அதேபோல் தொழில் பேட்டையும் உருவாக்கப்படும். பாரிய முதலீட்டு வலயமொன்று இங்கு உள்ளது. இங்கு சீனாவுக்கு மட்டுமல்ல சகல நாடுகளுக்கும் அது திறந்தே உள்ளது என்றார்.
நாடு இப்போது பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்பதையே இலங்கையின் இன்றைய நிலை எமக்கு கூறும் படிப்பினையாகும். நாம் உங்களுக்கு பாரிய அளவில் நிதி உதவிகளை வழங்கப்போவதில்லை. கடன்களை தரப்போவதும் இல்லை. பணம் மூலம் உதவிகளை செய்து நாட்டை மீட்டெடுக்க முடியாது என்றே நாம் கருதுகின்றோம்.
ஒருவர் உங்களுக்கு மீனை கொடுக்க முடியும். ஆனால் உண்மையான நண்பன் மீனை எவ்வாறு பிடிப்பது என்பதையே கற்றுக்கொடுப்பார். நாமும் அதனையே செய்கின்றோம். நாம் உங்களுக்கு மீன்களை கொடுக்க மாட்டோம், மாறாக மீனை பிடிக்கும் சகல வசதிகளையும் செய்து கொடுப்போம் என்றார்.
நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை இலக்காக கொண்டே நாம் இங்கு முதலீடுகளை செய்கின்றோம். இலங்கைக்கு முதலீட்டாளர்களை வரவழைக்க இதுவே சரியான சதர்ப்பமாகும். நெருக்கடிகால நிலைமையில் நாமும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். எம்மிடம் பலமான முதலீட்டாளர்கள் உள்ளனர். சிறந்த நிறுவனங்கள் உள்ளன. அவர்களுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்க எம்முடன் கைகோருங்கள் என தெரிவித்தார்.