வியட்நாம் தடுப்பு முகாமில் தடுதது வைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட உனது கணவரின் உடலை எனது குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்காக என்னிடம் கொண்டுவந்து தருமாறு அரசாங்கம் மற்றும் புலம் பெயர்ந்த சமூகத்திடம் உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் மனைவியார் இன்று வெள்ளிக்கிழமை (25) உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிரிழந்த கிரிதரனின் மனைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழ் நிலையால் வெளிநாடு செல்ல முயற்சித்து அவர் சென்றார்.
இந்த நிலையில் படகு பிடிப்பட்ட பின்னர் தான் அடுத்த நாள் தொலைபேசியில் என்னை அழைத்து கூறினார், எந்தவொரு பிரச்சினையும் இல்லை, யோசிக்க வேண்டாம், எனவும் நான் அழைப்பினை ஏற்படுத்திய தொலைபேசி எண்ணுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
இதை தான் கடைசியாக கூறினார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடைசியாக அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை தான் நான் அறிந்தேன். இதன் பின்னர் அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.
அந்த 30 இலட்சம் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும். நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகளும் இருக்கின்றன அவற்றிலிருந்து மீள வேண்டும் என தெரிவித்தே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.
எனவே கடைசியாக நான் அரசாங்கத்திடமும் புலம்பெயர் சமூகத்திடமும் விடுக்கும் கோரிக்கை, அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என கதறியழுத வண்ணம் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் கடந்த 8 ம் திகதி தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த நிலையில் இருவர் தற்கொலை செய்ய முயற்றித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் உயிரிழந்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது