தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தமிழ்நாடு மணவைத்தம்பியின் மகன் மணவை அசோகனின் மணிவிழாவில் தெரிவித்த கருத்துக்கள் தமிழ்த் தேசிய சக்திகளிடையே பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. எதனையும் வெட்டொன்று துண்டு இரண்டாக பேசும் சுபாவம் மனோ கணேசனுக்குரியது. இங்கும் அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
விவாதத்தைக் கிளப்பிய அவரின் கருத்துக்கள் இது தான். சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்துக்கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புக்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளையும் இந்திய தலைவர்களையும் காரணமாகக் காட்டுவதை நிறுத்துங்கள்.
இலங்கையில் தமிழர்கள் கண்டுவிட்ட இழப்புக்களுக்கு முதற் காரணம் தமிழ் அரசியல் மேதைகள். இரண்டாவது காரணம் கொலைகார சிங்கள பேரினவாத அரசுகள்.
1940 களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த சமஸ்டியை எட்டி உதைத்தது யார்?
65;:35 என்ற ஜன பரம்பலுக்கு நியாயமே அற்ற 50:50 என்ற கோதாரி கோரிக்கையை முன்வைத்து பிரிட்டிஸ்காரனே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்?
1987ல் வடக்கு – கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை ஆரம்பித்து வைத்த இந்திய – இலங்கையை ஒப்பந்தத்தை, மாகாணசபைகளை எட்டி உதைத்தது யார்?
இன்று “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்று 13யையாவது முழுமையாக அமூல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார்?
இந்திய நாட்டு பிரதமராக இருந்த – இருக்கவிருந்த ராஜீவையே போட்டுத்தள்ளிவிட்டு இப்போது இந்திய அரச தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்?
இன்றும் கூட சகோதர முஸ்லீம் மக்களின் தேசிய அபிலாசைகளை உள்வாங்காமல் வடக்கு – கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்?
கருணாநிதியும் இந்தியத் தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூற வரவில்லை. கருணா நிதியை கருணைநிதி என நான் கூறவில்லை. ராஜீவ் காந்தியை மகாத்மா காந்தி என நான் கூறவரவில்லை.
ராஜீவ்காந்தி அனுப்பிவைத்த ஐ.பி.கே.எவ் இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை என நான் கூறவரவில்லை.
ஆனால் தமது “தேச நலன்கள்”; அவரவருக்கு முக்கியம் என்பதும் இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும் நமது அரசியல் மேதைகளுக்கு விளங்கியிருக்க வேண்டும்.
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ எம்.ஜி.ஆரோ இன்று ஸ்ராலினோ தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டுக்கோடி தமிழர்களுக்குத்தான் முதலில் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள்.
மனோகணேசன் தமது கருத்துக்களை ஒரு ஆய்வுநிலையில் வேண்டுகோள்களாகவோ, ஆலோசனைகளாகவோ முன்வைத்திருந்தால் தமிழ்த் தேசிய சக்திகள் கொஞ்சம் பரிசீலித்திருப்பர். இது முழுக்க முழுக்க கிராமத்து வார்த்தையில் கூறுவதானால் ஒரு மோசமான வசைபாடலாகவே இருந்தது. கிராமங்களில் பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை நடக்கும் போது “நீ என்ன உசத்தியோ? நீ அவனோட போனனீ” என்று கூறுவது போல உள்ளது.
மனோகணேசனின் கருத்துக்களில் பலகேள்விகளும் விவாதங்களும் உள்ளன. முதலாவது கேள்வி மனோ கணேசன் வடக்கு கிழக்கு அரசியல் சக்திகள் தங்களுடைய பிரதேசங்களில் மட்டும் தங்கள் அரசியலைச் செய்ய வேண்டும். மலையக அரசியலிலோ, கொழும்பு அரசியலிலோ தலையிடக்கூடாது என இக் கட்டுரையாளரிடமே நேரடியாகக் கூறியிருந்தார். தமிழ் அரசியல் கட்சிகள் கொழும்பில் போட்டியிட முனைந்தபோதே இக் கருத்துக்களைக் கூறியிருந்தார். அவ்வாறான ஒருவருக்கு வடக்கு – கிழக்கு அரசியலில் தலையிடும் உரிமை இருக்கிறதா?
இரண்டாவது 1964ல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தை மனோகணேசன் கடுமையாகச் சாடியிருந்தார். “இந்தியா முழு மலையகத் தமிழர்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழு மலையகத் தமிழர்களையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும். ஒரு பகுதியினரை மட்டும் அழைத்து மறு பகுதியினரை அழைக்காமல் விட்டதனால் மலையக மக்கள் படுமோசமாக பலவீனமடைந்திருக்கின்றனா.; இது மலையக மக்களின் இருப்பை அழித்த ஒரு இன அழிப்பு” என்றும் கூறியிருந்தார்.
மலையக மக்களின் இருப்பு இந்தியாவால் பாதிக்கப்பட்டதை மனோகணேசன் சுட்டிக்காட்டலாம் என்றால் அதே இந்தியாவினால் இலங்கைத் தமிழர்களின் இருப்பு பாதிக்கப்படும்போது சுட்டிக்காட்டக்கூடாதா?
தவிர மனோகணேசனின் எச்சரிக்கை தமிழ்;த்தேசியவாதிகளை நோக்கியே இருந்தது. இது மனோகணேசனின் அரசியல் இருப்பைப் பாதிக்காதா? கொழும்பு மாவட்டத்தில் மனோகணேசனுக்கான வாக்குவங்கியில் 1ஃ3 பங்கினர் வடக்கு கிழக்கு வம்சாவழித்தமிழர்கள். கொழும்பில் வசிக்கும் வடக்கு – கிழக்கு வம்சாவழி தமிழர்களில்; மேட்டுக்குடியினர் மனோகணேசனை ஆதரிப்பதில்லை. அதேபோல கொழும்பை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவழித் தமிழர்களும் ஆதரிப்பதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி ஆதரவாளர்கள். மனோகணேசனின் நேரடி ஆதரவாளர்கள் மலையகத்தில் இருந்து கொழும்பில் குடியேறியவர்களும், வடக்கு – கிழக்கிலிருந்து கொழும்பில் குடியேறிய தமிழ்த் தேசிய ஆதரவாளர்களுமே. தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் ஆதரிப்பதற்கு பிரதான காரணம் தமிழ்த்தேசிய போராட்டத்தின் வலுவான துணைக்குரலாகவும,; பாதுகாப்பாளராகவும் மனோகணேசன் இருப்பார் என்பதே! மனோகணேசன் பல தடவைகள் இந்த நம்பிக்கையைப் பாதுகாத்தார் என்பதை மறுக்கவில்லை. தற்போது மனோ கணேசன் நேரடியாக தமிழ்த் தேசிய சக்திகளை பகைக்கும் போது அவரது அரசியல் இருப்பில் அது பாதிப்பை ஏற்படுத்தாதா? மனோகணேசனின் கருத்துக்கள் தமிழ்த் தேசிய சக்திகளின் இலக்கிற்கும் மனோ கணேசனின் நிலைப்பாட்டிற்குமிடையே நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
இக் கட்டுரையாளர் 30 வருடங்கள் தனது தொழில் நிமித்தம் கொழும்பில் வசித்தவர். கொழும்பில் மனோகணேசனின் இருப்பை பலப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்தவர்களில் அவரும் ஒருவர். அது மனோகணேசனுக்கும் தெரியும். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலரை மனோகணேசனின் ஆதரவாளர்களாக மாற்றுவதில் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் பட்ட கஸ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. மனோகணேசனின் இருப்பை பலப்படுத்துவதற்கான கொள்கை உருவாக்கத்தையும் அவர்கள் அமைத்துக் கொடுத்தனர். இன்று அவர்கள் அனைவரும் வெகுவாக ஆடிப்போயுள்ளனர்.
இனி மனோகணேசனின் கருத்துக்களில் உள்ள விவாத விடயங்களுக்கு வருவோம். மனோகணேசனின் முதலாவது குற்றச்சாட்டு 1940 களில் கண்டியச் சிங்களவர்கள்; தரவந்த சமஸ்டியை தமிழ் அரசியல்வாதிகள் எட்டி உதைத்தனர் என்பதாகும். இதில் வரலாற்றுத் தவறு இருக்கிறது. கண்டியச் சிங்களவர்கள் 1920களில் தான் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தனர். 1940 களில் அல்ல. 1940களில் கண்டியச் சிங்களவர்களும் பெரும்தேசியவாத அலைக்குள் வீழ்ந்துவிட்டனர். அதற்கு பிரதான காரணம் டொனமூர் அரசியல் யாப்பின்கீழ் மலையக மக்கள் அரசியல் சக்தியாக எழுச்சியடைந்து வந்ததை தடுப்பதேயாகும். 1936ல் அவர்களது வாக்கு வங்கி குறைக்கப்பட்டது எனினும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இதனால்தான் 1948இல் பிரஜாவுரிமைச் சட்டத்தையும் 1949இல் வாக்குரிமைச் சட்டத்தையும் கொண்டுவந்து மலையக மக்களை அநாதைகளாக்கினர்.
கண்டிய சிங்களவர்களின் அமைப்பான கண்டிய தேசியச் சபை கரையோர சிங்களவர்களின் ஆதிக்கம் கண்டியப் பிரதேசங்களில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே 1925ம் ஆண்டு தமது மாநாட்டில் சமஸ்டிக் கோரிக்கையை ஒரு தீர்மானமாக எடுத்தது. இலங்கை கரையோரப் பிரதேசம், கண்டிப் பிரதேசம், வடக்குக்கிழக்கு பிரதேசம் என மூன்று சமஸ்டிப் பிரதேசங்களாக பிரிக்கப்படல் வேண்டும் எனவும் கூறியிருந்தது. டொனமூர் விசாரணைக்குழுவினர் 1927ம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது அவர்களிடமும் கண்டியதேசியச் சபை சமஸ்டிக் கோரிக்கைகயைச் சமர்ப்பித்தது.
1920களின் பிற்பகுதியில் தான் பண்டாரநாயக்கா லண்டனில் தனது கல்வியை முடித்துவிட்டு இலங்கை திரும்பி அரசியலுக்கு வந்தார். சிங்கள அரசியலில் சேனநாயக்கா குடும்பம் ஆதிக்கம் செலுத்தியிருந்தமையினால் அவரால் பெரியளவிற்கு கரையோரப் பிரதேசங்களில் எழுச்சியடைய முடியவில்லை. தன்னை மேல்நிலைக்கு கொண்டுவருவதற்காக அவர் இரண்டு தீர்மானங்களை எடுத்தார். கிறீஸ்தவராக இருந்த அவர் பௌத்தராக மதம் மாறினார். டொனமூர் காலத்தில் அவர் மதம் மாறியபடியால் டொனமூர் பௌத்தர் என்றும் அழைக்கப்பட்டார். இது அவரது முதலாவது தீர்மானம். இரண்டாவது கண்டிய சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக கண்டிய ரஜ குடும்பத்தைச் சேர்ந்த சிறீமாவைத் திருமணம் செய்தார். கண்டி ரஜ குடும்ப திருமணம் கண்டிய மக்களிடையே அவரது செல்வாக்கை வளர்த்தது.
கண்டிய தேசிய சபையிலும் பண்டாரநாயக்கா முக்கிய பிரமுகரானார். அதன் சமஸ்டி கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு அதனை யாழ்ப்பாணம் வரை கொண்டுசென்றார். எனினும் தமிழ்த் தலைமைகள் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
தமிழ் அரசியல் தலைமைகள் சமஸ்டிக்கு ஆதரவு கொடுக்காமைக்கு பிரதான காரணம் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அன்று பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை என்பதுதான். 1921 வரை சிங்கள மக்கள் மத்தியில் தலைவர்கள் பெரியளவிற்கு இருக்கவில்லை. இதனால் தமிழ்த் தலைவர்களே முழு இலங்கைக்கும் தலைமை தாங்கினர். சேர் முத்துக்குமாரசுவாமி, சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம் ஆகியோர் இதில் முன்னிலையில் நின்றனர். படித்த இலங்கையர் பிரதிநிதிக்கான வாக்கெடுப்பில் 1912இலும் 1916இலும் சிங்கள மக்கள் சேர் பொன் இராமநாதனுக்கே வாக்களித்தனர். 1919இல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் முதலாவது தேசிய இயக்கமாக உருவாக்கப்பட்டபோது அதன் முதலாவது தலைவராக சேர் பொன் அருணாசலத்தையே சிங்கள மக்கள் ஏகமனதாக தெரிவு செய்தனா.; இந்த தமிழ்த் தலைவர்களே சிங்கள மக்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் குரல் எழுப்பினர். வெசாக் விடுமுறை, சிங்கள மொழிக் கல்லி, இலங்கைக்கான பல்கலைக்கழகம் என்பவற்றை இவர்களே கொண்டுவந்தனர். இதனால்தான் சிங்கள வரலாற்று ஆசிரியரான கே.எம்.டி.சில்வா “1921 வரை தமிழர்கள் தங்களை சிறுபான்மையோராக கருதவில்லை. சிங்களவரும் ஈழத் தமிழரும் இலங்கையின் பெரும்பான்மையினர் ஏனையோரே சிறுபான்மையினர் எனக் கருதினா”; எனக் குறிப்பிட்டார்.
1921ம் ஆண்டில் எழுச்சியடைந்த பிரதிநிதித்துவப்பிரச்சினையும், சிங்களத் தலைவர்களின் நேர்மையீனமும்தான் தமிழர்கள் இன அரசியலை தொடக்கக் காரணமாக அமைந்தது. 1921ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சேர் பொன் அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழர் மகா சபையை உருவாக்கினார். அப்போது தென்னிலங்கையிலும் மலையகத்திலும் வலுவான தமிழ் அமைப்புக்கள் இருக்கவில்லை. இதனால் இலங்கைத் தீவில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களையும் இணைத்து “தமிழ் அகத்தை” பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அருணாசலம் முன்வைத்தார். 1920 களில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவப் பிரச்சினை இருந்ததே ஒழிய இன ஒடுக்குமுறை இருக்கவில்லை. இன ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்கு சிங்கள தரப்பிடம் அரசியல் அதிகாரமும் இருக்கவில்லை. கண்டியர்களின் சமஸ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்காமைக்கு பிரதான காரணம் இவைதான்.
டொனமூர் யாப்பு அரைப்பொறுப்பாட்சியை இலங்கையர்களுக்கு வழங்கிய போது அது பெரும்பான்மை மக்கள் என்ற அடிப்படையில் அதிகாரத்தை சிங்கள தரப்பிற்கு கொடுத்தது. தமிழ் மக்கள் மீதும் ஒடுக்குமுறை பாயத் தொடங்கியது. எனினும் சோல்பரி யாப்பின்படி முழு அதிகாரமும் சிங்களத் தரப்பிற்கு வழங்கப்பட்டபோதே தமிழ் மக்கள் ஒடுக்குமுறையை அனுபவ ரீதியாக அடையாளம் காணத் தொடங்கினர்.
மனோகணேசன் எழுப்பும் விவாத விடயங்களை அடுத்தவாரம் பார்ப்போம்.