வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தை விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பிள்ளையார் கோவிலின் குளத்தில் இருந்து தனியார் ஒருவர் குளத்தில் தாமரை வளர்க்கப்போவதாக தெரிவித்து குளத்தில் இருந்து சுமார் 200 லோட்டுக்கு அதிகமான மணல் வெளி இடங்களில் விற்பனை செய்யப்பட்டதாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
குளத்தில் கால்நடைகள் நீர் அருந்தும் நிலையில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு இடம்பெறுவதால் கால்நடைகள் குளத்துக்குள் மூழ்கும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஊர் மக்கள் சிலர் குளத்தில் மணல் அகழ்பவர்களை கேட்டதற்கு பிரதேச சபை தவிசாளர் தமக்கு அனுமதி தந்ததாக தெரிவித்தே மணல் ஏற்றிச் சென்றதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு எழுத்து மூலமாக விளக்கமொன்றை அளிக்குமாறும் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் முறைபாட்டாளருக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதின் பொதுமக்கள் தொடர்புச் செயலாளரினால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.