நாட்டின் நெருக்கடிகளுக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வுகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு இன்று எவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கின்றது என்பதை சகலரும் நன்கு அறிவர்.
எமது நாடு மட்டுமல்ல உலக நாடுகளே பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு இருப்பதாக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருப்பதாக ஆளுங்கட்சி தரப்பினர் கூறி வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்குள் உலக நாடுகளில் மூன்று, நான்கு பிரதமர்கள் பதவி விலகியதை அவர்கள் உதாரணமாக காண்பித்து வருகின்றனர்.
அதேபோன்று அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எம்மவர்களும் அந்த நாடுகளின் நிலைமை கூறிக்கொள்ளும் அளவு சிறந்ததாக இல்லை என்று கூறுகின்றனர்.
எனினும், உலகிலுள்ள சகல நாடுகளும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை.
நான் 55 வருடங்களாக அரசியலில் இருக்கின்றேன். தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கும் தெரிவாகியுள்ளேன்.
கடந்த கால ஆட்சியாளர்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன்.
எனவே, நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அறிஞர்கள், விசேட நிபுணர்கள் இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இன்றை எமது பாராளுமன்றத்தினூடக இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்பிக்கையில்லை.
நீதியை ஸ்தாபிக்கும் பொறுப்புக்கூறும் இடத்தில், நிதி தொடர்பில் பொறுப்புக்கூறும் இடத்திலேயே பாராளுமன்றம் காணப்படுகின்றது.
எனினும் கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது இந்த நாடு முன்னேற்றகரமான நாடாக பயணிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.
நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படும் என்பதிலும் நம்பிக்கையீனமே காணப்படுகின்றது.