யாழில் திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை இன்று (28.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழைய முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தாக்கிய நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த வெளிமாவட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்நுழையாமல் காத்திருந்மையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews