
சிறிலங்காவில் பொது மக்களின் வங்கிக்கணக்குளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எட்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி குறித்த வணிகரின் வங்கிக் கணக்கிற்கில் இருந்து அனுமதியற்ற முறையில் 13.7 மில்லியன் ரூபா பணத்தை மற்றுமொரு கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களை நவம்பர் 30ஆம் திகதி கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் , டிசெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் கணினி குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், அவதானமாக வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், வங்கிக் கணக்குகளை அடிக்கடி சரிபார்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.