கல்லூண்டாயில் யாழ்.மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றையதினம் யாழ்.மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த எட்டு வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதுடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன.
ஆனால் இன்றையதினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடாத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினர் கருத்து தெரிவிக்கையில், மூன்றாவது நாளாக எமது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யாழ். மாநகர சபையானது எமது எல்லைக்குள் குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுகிறது.
இதனால் அயலில் வசிப்பவர்களது வீட்டில் இலையான் தொல்லை அதிகரித்துள்ளது. அவர்கள் உண்ணும் உணவிலும் இலையான் மொய்ப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
நாங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் யாழ். மாநகர சபைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பினோம். அந்த கடிதத்தில், சேதன பசளை உற்பத்தி செய்வதற்கு குப்பைகளை எங்களுக்கு வழங்குங்கள் என குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் அதற்கு மாநகர சபையினர், நாங்களும் சேதன பசளை உற்பத்தி செய்கின்றோம். இந்த குப்பைகள் எமக்கே போதாது ஆகையால் நாங்கள் குப்பைகளை வழங்கமாட்டோம் என கூறினர்.
தாங்கள் சேதனப் பசளை உற்பத்தி செய்வதாயின் ஏன் எங்களது எல்லைக்குள் குப்பைகளை கொட்டுகின்றனர்? குப்பைகளை தாங்கள் தரம்பிரித்து கொட்டுவதாக அவர்கள் கூறினர்.
ஆனால் குப்பை கொட்டும் பகுதியை பார்வையிட்ட வேளை குப்பைகளை தரம்பிரிக்காமல் கொட்டியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
மாநகரசபையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் எமக்கும் நல்லது. யாழ். மாநகரம் அழகிய நகரம், கல்லூண்டாய் என்ன அசிங்க நகரமா? எனவே மாநகரசபையினர் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
இப்போராட்டத்தில் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.