சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது டொலர்கள் இன்றி உண்டியல் வடிவில் கமிஷன் பணத்தை நாட்டுக்கு கொண்டுவந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
இரண்டு வயதுக்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளை கொண்ட தாய்மாரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான அனுப்புவதில்லை.
மாதக்கணக்குகளேயான குழந்தைகளையுடைய தாய்மாரை மோசடியாக ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கிராமசேவகரிடம் மோசடியான முறையில் சான்றிதழை பெற்று இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மோசடியான முறையில் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றார்கள் என்பது கூட தெரியாது.
இவ்வாறு செல்பவர்களின் தகவல்களும் எமக்கு தெரியாது.
இதன் காரணமாகவே 5 வயது என்று காணப்பட்ட வயதெல்லையை இரண்டரை வயதாக மாற்றி, மிகவும் மோசடியாக வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவர்களை எமது வலையமைப்புக்கு உள்வாங்கினோம்.
இதற்கூடாக இரண்டரை வயது தொடக்கம் 18 வரையான சிறுவர்களின் பாதுகாப்பை எமது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடிந்தது.
இதற்கமைவாக விசேட திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.