
சுற்றுலா தொழிற்துறையை ஊக்குவிப்பதற்காக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் காணி விவகாரங்கள் தொடர்பான அமைச்சு ஆலோசனை தெரிவுக்குழு அவரது தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுத்துறையின் வளர்ச்சி சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்க எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுப்படுத்திய அமைச்சர், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த செயலி மூலம் சுற்றுலாப் பயணிகள் விரும்பினால், அவர்கள் இருக்கும் இடத்தை சரிபார்க்க அனுமதி வழங்கவும் அவர்கள் வழிமாறி சென்று விட்டால் அல்லது பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் தேவை இருப்பின் அவற்றை செய்ய முடியும்.
மேலும் சுற்றுலாப் பயணிகளின்பாதுகாப்புக்காக சுற்றுலா பொலிஸ் குழுக்களை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த அனைத்து கடற்கரைகளிலும் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் 15 லட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.