தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய சக்திகள் தொடர்பாகவும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பாகவும்,; தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் சில பற்றியும் சென்றவார கட்டுரையில் ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக அவரது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எழுந்த கேள்விகளையும் முதலாவது குற்றச்சாட்டான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த சமஸ்டியை எட்டி உதைத்தது யார்? என்ற குற்றச்சாட்டு எழுப்பியுள்ள விவாதங்களையும் பார்த்திருந்தோம்.
கடந்த கட்டுரை 27ம் திகதி வெளிவந்தது. வெளிவந்த அன்று பகல் 12 மணியளவில் மனோகணேசனின் அழைப்பு கட்டுரையாளருக்கு கிடைத்தது. அதில் அவர் தனது குற்றச்சாட்டுக்களுக்கான நியாயங்களை முன்வைத்தார். இக் கட்டுரையாளரும் தனது பக்க நிலை நின்று நியாயங்களை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட நேரம் பலத்த விவாதம் இடம்பெற்றது. ஆனாலும் விவாதம் நட்பு ரீதியாக இருந்தது. தொடர்ந்து பேசுவோம் என்றும் தான் வரவு செலவுத்திட்ட விவாதம் முடிவடைந்ததும் யாழ்ப்பாணம் வருவேன் அப்போது சந்தித்து விரிவாகப் பேசுவோம் என்றும் குறிப்பிட்டார். தனது கட்டுரை தொடர்பாக உடனடியாகவே கருத்துக்களை நாகரீகமான வகையில் வழங்கிய மனோகணேசனுக்கு இக் கட்டுரையாளர் நன்றி தெரிவிக்கின்றார். மனோகணேசனின் ஏனைய குற்றச்சாட்டுக்களுக்கான பதில்களை வழங்கும்போது அவரின் நியாயங்களும் தெளிவாக முன்வைக்கப்படும். இவ் ஆய்வு கத்திக்கு கத்தி, பல்லுக்கு பல் வழங்கும் ஒன்றல்ல. வரலாற்றில் உண்மையாக என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியே!
கடந்த கட்டுரையில் மனோகணேசனின் கருத்துக்கள் தொடர்பாக மூன்று கேள்விகளை கட்டுரையாளர் எழுப்பியிருந்தார். வடக்கு – கிழக்கு அரசியல் சக்திகள் மலையக அரசியலிலோ கொழும்பு தமிழ் அரசியலிலோ தலையிடக் கூடாது என முன்னர் கூறிய மனோகணேசன் வடக்கு – கிழக்கு அரசியலில் தலையிடுவது சரிதானா? சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மலையக மக்களின் இருப்பை பாதித்த போது மனோகணேசன் சுட்டிக்காட்டலாம் என்றால் இந்தியாவினால் வடக்கு – கிழக்கு மக்களின் இருப்பு பாதிக்கப்படுகின்றபோது சுட்டிக்காட்டக்கூடாதா? தமிழ்த் தேசிய சக்திகளை பகைப்பது அவரின் கொழும்புத் தமிழ் வாக்கு வங்கியைப் பாதிக்காதா? என்பதே அக் கேள்விகள்.
மனோகணசன் அதற்குப் பதில் வழங்கும்போது வடக்கு – கிழக்கு மக்களின் விடுதலைப் போராட்டம் தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீதும் தாக்கம் செலுத்துகின்றது என்றார். 1958, 1977, 1983 இன அழிப்புகளில் தென்னிலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றார். 1983ம் ஆண்டு இன அழிப்பில் தமது சொந்த உடமைகளும் அழிக்கப்பட்டன என்றும் கூறினார். இதைவிட மலையக இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் போராளிகளாக வடக்கு – கிழக்கில் குடியேறிய மலையக வம்சாவழியினர் இணைந்து மாவீரர்களானார்கள் என்றும் இறுதியாக முள்ளிவாய்க்கால் படுகொலையில் மலையக வம்சாவழியினர் பலர் இறந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டு தான் சார்ந்த மக்கள் பாதிக்கப்படும்போது கருத்துக்கள் சொல்லும் உரிமை தங்களுக்கு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். மேலும் போர் காரணமாக கொழும்பு மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான வடக்கு கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்தபோது அவர்களின் பாதுகாவலனாக தான் இருந்தேன் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவினால் எமது மக்களின் இருப்பு பாதிக்கப்படும்போது நான் சுட்டிக்காட்டினேன் அது தவறல்ல ஆனால் இந்திய விவகாரத்தில் இராஜதந்திரமாக நகர்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார். மனோகணேசனின் இக் கருத்துக்கள் உண்மையானவை, நியாயமானவை என்பதை இக் கட்டுரையாளர் மறுக்கவில்லை. இரண்டு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாமல் நகர வேண்டும் என்பதே இக் கட்டுரையாளரின் கருத்தாக இருக்கின்றது.
இனி மனோகணேசனின் இரண்டாவது குற்றச்சாட்டிற்கு வருவோம். 65:35 என்ற சனப்பரம்பலுக்கு நியாயமே அற்ற 50:50 என்ற கோரிக்கையை முன்வைத்து. பிரித்தானியக் காரனே கையை விரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்? என்பதே அக் குற்றச்சாட்டாகும். 1930 களிலும் 1940 களிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ பொன்னம்பலம் முன்வைத்த 50:50 கோரிக்கையைப் பற்றியே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 30 களிலும் 40 களிலும் நிலவிய அரசியல் சூழல், ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் 50:50 கோரிக்கைக்கான காரணங்கள், அதன் உண்மையான உள்ளடக்கம் என்பன பற்றி தெளிவான புரிதல்கள் பெறுவது அவசியமானது.
1927ம் ஆண்டு இலங்கைக்கென புதிய அரசியல் யாப்பினை சிபார்சு செய்வதற்காக டொனமூர் குழுவினர் இலங்கை வந்தனர். இக் காலத்தில் தான் ஜீ.ஜீ பொன்னம்பலமும் தனது லண்டன் கல்வியை முடித்து இலங்கை திரும்பி அரசியலில் பிரவேசித்தார். அவர் பிரவேசித்தபோது தமிழ் அரசியல் சூழலில் இரண்டு அரசியல் போக்குகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தன. ஒன்று 1921ம் ஆண்டு சேர். பொன். அருணாசலத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ் மகாசபையின் தமிழ் இன அரசியல், இரண்டாவது யாழ்ப்பாண வாலிப காங்கிரசினால் வளர்க்கப்பட்ட இலங்கைத் தேசிய அரசியல். இந்த இரண்டு அரசியல் போக்குகளிலும் இரண்டாவது போக்குத்தான் தமிழ்ச் சூழலில் அதில் வளர்ச்சி கண்டிருந்தது.
சேர்.பொன். அருணாசலம் “சிங்கள சக்திகளோடு இனிமேல் இணைந்து பயணிக்க முடியாது. நாம் இலங்கைத் தீவிலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் இணைத்து தமிழ் அகத்தை பலப்படுத்துவோம்” என்றார். 1921ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களின் கரகோசத்திற்கு மத்தியில் அருணாசலம் இந்த கோசத்தை முன்வைத்தார். ஜீ.ஜீ. பொன்னம்பலம் இதனை “தமிழனென்று சொல்லடா? தலைநிமிர்ந்து நில்லடா” என்பதாக வளர்த்தெடுத்தார்.
“தமிழ் அகத்தை” இலங்கைத் தீவில் பலப்படுத்த வேண்டும் என்றால் 1833இல் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரிப்பிரதிநித்துவ முறை தொடரப்பட வேண்டும் என்பது தமிழ் அரசியல் சக்திகளின் கருத்தாக இருந்தது. இனவாரிப்பிரதிநிதித்துவம் ஒரு வகையில் சமநிலைப்பிரதிநித்துவம் தான். 1924ம் ஆண்டு சேர்.பொன். அருணாசலம் மரணமடைய சேர்.பொன்.இராமநாதன் இக் கருத்தினை வலியுறுத்தினார். 1927 ம் ஆண்டு தனது தள்ளாத முதிய வயதில் டொனமூர் குழுவினர் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது மீளவும் இனவாரிப் பிரதிநிதித்துவம் முழுமையாக அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என்றே குறிப்பிட்டார். ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடமும் இக் கருத்தே மேலோங்கியிருந்தது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் கருத்து இதற்கு மாறாக இருந்தது. அவர்கள் இலங்கைத் தேசிய நிலை நின்று இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை டொனமூர் குழுவினரிடம் முன்வைத்தனர். தமிழ்த் தரப்பின் இரண்டு கோரிக்கைகளையும் டொனமூர் குழுவினர் புறக்கணித்தனர். அவர்கள் அரைப்பொறுப்பாட்சி அடங்கிய அரசியல் தீர்வை சிபார்சு செய்தனர்.
டொனமூர் யாப்பு இலங்கையில் வாழ்ந்த எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தவில்லை. அது சட்டசபையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது இரண்டு தரப்பினரும் எதிர்த்தே வாக்களித்தனர். சிங்களத்தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு காட்டப்பட்டது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் சட்டசபை உறுப்பினர்களை தனித்தனியாக கையாண்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் டொனமூர் யாப்பை வெற்றி பெறச் செய்தனர். வாக்களிப்பில் சமநிலை வந்தபோது ஒரு வாக்கினால் வெற்றிபெறச் செய்தவர் மட்டக்களப்பின் சட்டசபை உறுப்பினரான ஈ.ஆர். தம்பிமுத்து ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கொலை செய்யப்பட்ட சாம் தம்பிமுத்துவின் தந்தையாவார்.
டொனமூர் யாப்பின்படி புதிய அரசுச்சபைக்கான தேர்தல் 1931ம் ஆண்டு நடைபெற்ற போது இலங்கைக்கு முழுமையான சுதந்திரத்தை யாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டி யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரித்தது. சிங்களத் தலைவர்கள் முதலில் பகிஸ்கரிப்பு இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக கூறியபோதும் பின்னர் பின்வாங்கி தேர்தலில் பங்கெடுத்தனர். யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் பங்கெடுப்பினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் தேர்தல் நடக்கவில்லை. ஜீ.ஜீ. பொன்னம்பலம் தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்கவில்லை. தேர்தலில் பங்குபெறுவதையே விரும்பினார். இது தொடர்பாக யாழ்ப்பாண வாலிப காங்கிரசுடனும் முரண்பட்டார். தனது முயற்சி வெற்றியளிக்காத போது மன்னார் – முல்லைத்தீவு தொகுதியில் போட்டியிட்டு தோல்லியடைந்தார். பின்னர் 1934ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது வரலாறு.
டொனமூர் யாப்பு அரைப்பொறுப்பாட்சியை ஏற்கனவே கோல்புறூக் சீர்திருத்தம் மூலம் வளர்த்தெடுத்த ஒற்றையாட்சி நிர்வாகக் கட்டமைப்பிடம் பெரும்பான்மை ஜனநாயக தேர்தல் முறை மூலம் வழங்கியது. இது சிங்கள மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. மறுபக்கத்தில் முழுமையான பிரதேசவாரிப்பிரதிநிதித்துவ முறையின் அறிமுகத்தினால் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் வீழ்ச்சியடைந்தது.
சிங்களத்தரப்பிடம் டொனமூர் யாப்பு வரும்வரை ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படவில்லை இதனால் மேலாதிக்கத்தையோ, ஏனைய இனங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையினையோ பெரியளவிற்கு கட்டவிழ்த்து விடமுடியவில்லை. டொனமூர் யாப்பு அரைப்பொறுப்பாட்சியை வழங்கியமையினால் தனது கோர முகத்தைக்காட்ட முனைந்தது. இதற்கு முன்னரும் 1910 களில் முஸ்லீம்களுக்கு எதிரான ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 1915 சிங்கள – முஸ்லீம் கலவரம் இதன் அடிப்படையில் தான் நிகழ்ந்தது. 1800 களின் பிற்பகுதியில் எழுச்சியடைந்து பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் அநகாரிகதர்மபாலாவின் வருகைக்குப் பின்னர் சிங்கள -பௌத்தம் என்ற நிலையை அடைந்தமையே கலவரத்திற்கு பிரதான காரணமாக அமைந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்களினால் கலவரம் கடுமையாக ஒடுக்கப்பட்டது. டி.எஸ்.சேனநாயக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கொடிய 1ம் உலக யுத்தம் நடந்த நிலையிலும் சேர்.பொன்.இராமநாதன் கப்பலில் இங்கிலாந்து சென்று ஆங்கிலேய ஆட்சியளாகளுடன் பேசி கலவரத்தினை நிறுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களையும் சிறையிலிருந்து விடுவித்தார்.
1931ம் ஆண்டுதேர்தலின் பின்னர் மந்திரி சபை அமைக்கப்பட்ட போது தமிழர்கள் சார்பிலும், முஸ்லீம் சார்பிலும் இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். தமிழர் சார்பில் பெரி சுந்தரம் தொழில் அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார். முஸ்லீம்கள் சார்பில் மாக்காண் மாக்கார் போக்குவரத்து அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார். இங்கு அமைச்சர் தெரிவு என்பது நிர்வாக குழுக்களில் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற சிங்களத் தரப்பின் கைகளிலேயே அப் பெரும்பான்மை தயவு பண்ணினால் மட்டும் தமிழர்களோ முஸ்லீம்களோ அமைச்சர்களாக வரமுடிந்தது.
1930களின் ஆரம்பத்தில் இருந்து ஏ.ஈ.குணசிங்கா சிங்களத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத் தலைவராக எழுச்சியடைந்தார். கொழும்பில் இக் காலத்தில் மலையாளத் தொழிலாளர்களே மேல்நிலையில் நின்றனர். இவர்களின் மேல்நிலை சிங்கள தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்றது எனக் கூறி மலையாளத் தொழிலாளருக்கு எதிரான இனவாதத்தை ஈ.ஏ. குணசிங்கா முன்னெடுத்தார். அவரது “வீரையா” என்ற பத்திரிகை இனவாத்தை கடுமையாக கக்கியது. மலையாளத் தொழிலாளர்களின் வெள்ளவத்தை நெசவாலைப் போராட்டம் எழுச்சியடைந்தது. இந்தப் போராட்டம் லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சியின் தோற்றத்திற்கும் காரணமாக அமைந்தது.
1936ம் ஆண்டு தேர்தலின் பின் மந்திரி சபை அமைக்கப்பட்ட போது அது தனிச் சிங்கள மந்திரி சபையாக இருந்தது. இன்னோர் பக்கத்தில் 1931 தேர்தலிலும் 1936 தேர்தலிலும் ஹட்டனில் இருந்தும், தலவாக்கலையில் இருந்தும் இரு மலையக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இத்தெரிவு மலையகத்தில் கண்டியச் சிங்களவரின் ஆதிக்கத்தை பலவீனப்படுத்திவிடும் என்பதற்காக மலையக மக்களின் வாக்குரிமையை கட்டுப்படுத்தும்படி கோரிக்கை எழுப்பப்பட்டது. அதே வேளை நெற்காணிச் சட்டம், மீன்பிடிச் சட்டம், போக்குவரத்துச் சட்டம் என்பன கொண்டுவரப்பட்டு இந்திய வம்சாவழியினர் அத் தொழில்களில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது. இன்னோர் பக்கத்தில் சேர்.ஜோன் கொத்தலாவலை போக்குவரத்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவழியினரை ஒரே நாளில் வேலையில் இருந்து நீக்கினார்.
இந் நிலையில் தனிச் சிங்கள மந்திரி சபை, இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதம் என்பன ஜீ.ஜீ பொன்னம்பலம் 50:50 கோரிக்கையை முன்னெடுக்கக் காரணமாகியது. இதன் உண்மையான அர்த்தம் சிங்கள இனத்திற்கு சமமான வாய்ப்புக்கள் ஏனைய இனங்களுக்கும் இருக்கவேண்டும் என்பதே! அதாவது ஒரு இனம் இன்னோர் இனம் மீது மேலாதிக்கம் செலுத்தக் கூடாது என்பதே! ஆனால் இந்தக் கோரிக்கை இலங்கை அரசியலில் தவறாக பொருள் விளக்கம் செய்யப்பட்டது.
50:50 கோரிக்கை பிறந்த கதை இதுதான்.