யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக இரு டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பம்

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள இரு கற்கை நெறிகளினதும் அறிமுக நிகழ்வு நேற்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. அறிமுக நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கற்கைநெறிகளை ஆரம்பித்துவைத்தார். நிகழ்வில் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பாலசுந்தரம் நிமலதாசன், வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கைநெறி இணைப்பாளர் பேராசிரியர் திருமதி எல்.கெங்காதரன், தொழில்சார் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி இணைப்பாளர் கலாநிதி மு.சண்முகநாதன், பேரவை உறுப்பினர்கள், இலங்கை வங்கியின் உதவிப் பொது முகாமையாளர், வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள், பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கற்கை நெறிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கற்கைநெறிகளுக்கான வளவாளர்களாக அந்தந்த துறைகளில் தேர்ச்சிபெற்ற தொழில்சார் வல்லுனர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். சமூகத்தின் தேவையைச் செவ்வனே உணர்ந்து, அச்சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் ஒரு செயற்பாடாக இந்த இரு டிப்ளோமா கற்கைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews