
வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள தொடருந்து கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
இன்று (4) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி உந்துருளியில் பயணித்த போது, குறித்த பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட நிலையில் மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்ததொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்திருந்தார்.
காயங்களுக்குள்ளான குறித்த நபர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செட்டிகுளம் துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் பலியாகியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பறையனாலங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.