ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுகின்றன – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தான் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதிக்கு 57 வீதம் ஒதுக்கிப்பட்டதாக கூறப்படும் செய்தியானது உண்மைக்குப் புறம்பானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில், சிறப்புரிமை பிரச்சினையொன்றை சபையில் முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவாரமாக எனது சிறப்புரிமையை மீறும் வகையில் பல ஊடகங்கள் மிகவும் தவறான ஒரு செய்தியை என்னையும் தொடர்புப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.

தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவினதும் எனதும் புகைப்படத்தை வெளியிட்டு ஜனாதிபதி செயலகத்தில் ஆளணியை பராமரிப்பதற்கு 1,580 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முற்றுமுழுதும் தவறானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதிக்கு 45 வீதமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதிக்கு 57 வீதமும் ஒதுக்கியிருந்ததாக கண்டறியப்படுகின்றது என்று கூறப்பட்டு இருக்கின்றது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல் கிடைத்தாகவும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதற்கு முன்னர் எந்த ஒரு ஜனாதிபதியும் நடைமுறைப்படுத்தாத தேசிய மட்டத்திலான ஏழு கருத்திட்டங்களை நான் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தினேன்.

அந்தக் கருத்திட்டங்கள் நாட்டில் பெருமளவு பிரபல்யம் வாய்ந்ததாக இருந்தன. அவை ஏற்று அங்கிகரிக்கப்பட்டன.

அதில் ஒன்றுதான் தேசிய போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை. போதைப் பொருள் கடத்தல் காரர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் சிறைச்சாலைக்கு சென்றதன் பின்னர் அவர்களில் சிலரை தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு நான் கையெழுத்து இட்டேன்.

அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் நாட்டில் தற்போது போதைப் பொருள் பிரச்சினை என்பது இருந்திருக்காது.

ஆனால் அதற்கு எதிராக அடிப்படை உரிமைபற்றிய வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு இன்னும் முடிவடையவில்லை.

அதேபோன்று தேசிய சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம். நூற்றுக்கு 50 சதவீதமான மணல் அனுமதிப்பத்திரமில்லாமல் ஏற்றிச்செல்லப்படுகின்றது என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்க பணியகத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றாடல் தொடர்பிலான இந்த விடயத்துக்கு நான் முப்படைகளையும் ஈடுபடுத்தி மிகவும் வெற்றிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

பொலிஸாரையும் இணைத்துக்கொண்டு ஒன்றிணைந்த திட்டத்தை நான் நடைமுறைப்படுத்தினேன்.

அதேபோன்று தேசிய சிறுநீரக நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். நாட்டில் சிறுநீரக நோயாளர்கள் அதிகம் காணப்படும் பிரதேசத்துக்கு ஜனாதிபதி செயலகத்தினூடாக நிதியை ஒதுக்கி உத்தியோகத்தர்களை நியமித்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews