வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவர்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் இருவர் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்தனர். அவர்களில் யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் சர்வதேச புலம்பெயர் அமைப்புடனும் வியட்நாமிய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக வியட்நாமிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு அனுப்புமாறு அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் பிரசன்ன கமகே தெரிவித்துள்ளார்.
உள்ளுர் அதிகாரிகளிடமும் ஐஓஎம் உடனும் நாங்கள் உடலை இலங்கைக்கு அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் உள்ளுர் அதிகாரிகளும் ஐ.ஒ.எம்மும் அதற்கு ஆதரவளிக்கவில்லை எனவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு பெருமளவு பணம் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.