மாணவனை மிரட்டி தேசிய மட்ட போட்டியில் இருந்து விலக வைக்க கடிதம் கேட்ட வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட பாடசாலை சமூகம்.
வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்க விடாமல் அதிபர், ஆசிரியர்கள் தடுத்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பாடசாலைக்கு வருகை தந்த வலிகாமம் கல்வி வலய அதிகாரி ஒருவரும், குறித்த மாணவனை சுய விருப்பின் பேரில் போட்டியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தருமாறு வற்புறுத்தினார் எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நாடகம் ஒன்று கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டங்களில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பில் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்குபற்றும் மாணவர்களில் சிலர் அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். அவர்களில் சிலர் பாடத் தெரிவின் அடிப்படையில் மேற்படி பாடசாலையில் இல்லாத பாடங்களை கற்பதற்கு விரும்பியதால் வேறு பாடசாலைகளில் அனுமதி பெற்றிருக்கின்றனர் எனத் தெரியவருகின்றது. இதேபோன்றே, மேற்படி மாணவனும் ஊடகவியல் பாடத்தைக் கற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அந்தப் பாடத்திற்கு பாடசாலையில் ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
குறித்த மாணவனும் தேசிய மட்டத்திற்கு செல்லும் நாடகக் குழுவில் இடம்பெற்றிருந்ததால் கடந்த வியாழக்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற ஒத்திகை பார்க்கும் நிகழ்விற்கு சென்றார். இதன்போது, அவரை அழைத்த அதிபர் வேறு பாடசாலைக்கு செல்லவிருக்கும் மாணவன் என்பதால் நாடகத்தில் பங்குபற்ற முடியாது எனக் கூறி அவரது விடுகைப் பத்திரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினார்.
வீட்டிற்கு சென்ற மாணவன் விடயத்தை பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து பாடசாலைக்கு சென்ற தாயார் தமது கோரிக்கை இன்றி தனியே மகனிடம் விடுகைப் பத்திரத்தைக் கொடுத்தமை தொடர்பாக தமது ஆட்சேபனையை வெளியிட்டார். மேலும். நாடகத்தில் தமது மகன் இடம்பெறாமை குறித்தும் கவலையை வெளியிட்டார். இதன்போது, கொழும்பிற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு நிதி இல்லை எனவும் தாம் போட்டிக்கு செல்லவில்லை எனவும் அதிபர் தமக்கு தெரிவித்தார் என தாயார் கூறினார்.
எனினும், பின்னர் நாடக ஒத்திகைக்காக மாணவர்களுக்கு அறிவிக்கும் வாட்சப் குழு கலைக்கப்பட்டு குறித்த மாணவன் இணைக்கப்படாமல் புதிய குழு உருவாக்கப்பட்டு நாடக ஆற்றுகைக்கான ஒத்திகை இடம்பெற்றிருக்கின்றது. இதை அறிந்த தாம் அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அதிபர் என்ற வகையில் தமக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டெனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் என தாயார் கூறினார்.
மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பெற்றோர் செவ்வாய்க்கிழமை (06) முறைப்பாடு செய்தனர்.
இதன்போது, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர், விசாரணை நடத்துவதற்காக செவ்வாய்க்கிழமை (06) பிற்பகல் பாடசாலைக்கு சென்றபோது, ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட இரு பெற்றோர்களும் ஆசிரியர்கள் சிலரும் குறித்த மாணவனுக்கு எதிரான கருத்துக்களை கடுமையாக முன்வைத்தனர்.
அங்கிருந்த பெற்றோர்கள், குறித்த மாணவன் போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தால் தமது பிள்ளைகளை தாம் பங்குபற்ற அனுப்பமாட்டார் எனக் கூறியிருக்கின்றனர். குறித்த மாணவன் ஒழுக்கம் அற்றவர் எனவும் அவரை இனி பாடசாலை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதிக்க தாம் விரும்பவில்லை எனவும் ஆசிரியர்கள் கூட்டாகத் தெரிவித்தனர் என தாயார் கூறினார்.
மாணவனுக்கு குரல் வளம் சரியாக இல்லை என அங்கிருந்த இசைத்துறை பாட ஆசிரிய ஆலோசகர் தெரிவித்தார் எனக் கூறிய தாயார், நாடகம் மாகாண மட்டம் வரை சென்று வெற்றிபெறுவதற்கு சரியாக இருந்த குரல்வளம் இப்போது எப்படி திடீரென இல்லாமல் போகும் எனக் கவலையுடன் கேள்வி எழுப்பினார்.
தீர்வை வழங்குவதற்காக பாடாசாலைக்கு வந்திருந்த கல்வி வலய உயரதிகாரி, மாணவனின் தாயாரை வெளியே அனுப்பிவிட்டு அறையினை பூட்டி, குறித்த மாணவனை சுயவிருப்பில் நாடகத்தில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதி ஒப்பிட்டு வழங்குமாறு கோரினார் எனவும் தாயார் தெரிவித்தார். இவர்கள் இவ்வாறு முறையற்று நடந்துகொண்டால் வலிகாமம் வலயத்தின் கல்வி எப்படி உயரும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்ட வேளை அதிபர் பதில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறிவிட்டு அழைப்பினை துண்டித்தார். இன்றையதினம் இது தொடர்பில் தகவல் பெறுவதற்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டவேளை குறித்த மாணவன் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பதனை உறுதிப்படுத்தினார்.
மாணவர்களை வழிப்படுத்தி வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய கல்விச் சமூகமே மாணவர்களின் திறமைகளை குழிதோண்டிப் புதைப்பது என்பது மிகுந்த மனவேதனையையும் பாடசாலைச் சமூகம் மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.