பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து மின்சார கட்டணத்தை அதிகரித்து அந்த சுமையை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றது என யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் மின்சாரசபை ஒரு தனியுரிமை நிறுவனம். பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள் தவறான நியமனங்கள் காரணமாக ஒரு தனியுரிமையாக இருக்கின்ற அரச நிறுவனம் பல கோடிக்கணக்கான இழப்புக்களை வருடா வருடம் சந்தித்து வருகின்றது.
இந்த இழப்புக்களை சீர்திருத்தி, அந்த இழப்புக்களை தவிர்ப்பதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே விலையை அதிகரித்து மக்கள் மீது இந்த சுமையை சுமத்துவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருகின்றது. அதற்கு இந்த பொருளாதார நெருக்கடி காரணாக காட்டப்படுகின்றது.
மின்சாரம், எரிபொருளின் மூலம் இயங்குவதால் பாரியளவிலான செலவு ஏற்படுகின்றது என்று பல ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. பல்வேறுபட்ட சக்திமூலங்களை பயன்படுத்தலாம்.
இயற்கையான, சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எத்தனையோ சக்தி வலுக்களுக்கு ஊக்குவிப்பு கொடுக்கலாம். தனியார்களை ஊக்குவித்து அவர்கள் மூலம் நிறுவுவதற்கு முயற்சிக்கலாம். இவ்வாறான அந்த பக்கங்களை எல்லாம் விடுத்து விலையை அதிகரிப்பது என்பது ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளால் நொந்து போயிருக்கும் இந்த சூழலில் மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இது மென்மேலும் எமது மக்களை இனி இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய துயரத்திற்குக் கொண்டு செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.