
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமாகிய அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கூறப்படும் குறித்த குழுவினர் பேராசிரியர் தங்கியிருந்த வீட்டினையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பேராதனை காவல்துறையினர் தாக்குதலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன்இ காயமடைந்த பேராசிரியரை சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும் அவரது மகனை கண்டி வைத்தியசாலையிலும் அனுமதித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
மாணவர் குழுவொன்றுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன்இ பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.