பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் எனக்கூறி தேடுதல் நடத்துவது போல் நடித்து மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேரும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப் பொருளை பயன்படுத்த பணத்தை தேடிக்கொள்வதற்காக பொலிஸ் சீருடையில் சென்று இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த 9 ஆம் திகதி இரவு கடமை முடிந்து, சீருடையிலேயே தனது இரண்டு சகாக்களுடன் முச்சக்கர வண்டியில் மிதொட்டுமுல்ல சந்தியில் ரயில் பாதைக்கு அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவது போல் நடித்து, வீட்டில் இருந்த ஒருவர் அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்கள் உட்பட சுமார் 35 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.
வீட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் வீட்டில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர்கள் பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான119 இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு சென்றதால், கொள்ளையிட சென்றவர்களுக்கு தப்பிச் செல்ல முடியாமல் போயுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சீருடையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் 13 ஆண்டுகள் பொலிஸ் துறையில் கடமையாற்றி வந்தவர் எனவும் மூன்று ஆண்டுகள் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார் எனவும் வெல்லம்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.
ஏனைய இரண்டு பேர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சகாக்கள் எனவும் இவர்கள் மூவரும் ஐஸ் போதைப் பொருளுக்கு மோசமாக அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் மாலபே, பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் திஸாநாயக்க பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அண்மையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் சிலாபம் பிரதேசத்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் கிருளப்பனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் ஐஸ் மற்றும் ஏனைய போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.