தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் விடயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கட்சியின் மத்தியகுழுவில் கருத்து தெரிவித்திருந்த எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் பேசியதாகவும், அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் பேசப்பட்ட விடயம் பற்றி செய்திகளை பார்த்து அறிந்தேன். ஒவ்வொரு கட்சியும் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. அது தமிழ் அரசு கட்சிக்கும் உள்ளது. என்றாலும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் அந்த யோசனையை இதுவரை எம்மிடம் தெரிவிக்கவில்லை. கலந்துரையாடவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி, தமிழ் மக்களை ஓரணிப்படுத்தவே நாம் தொடர்ந்து முயன்று வருகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையையே மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
என்றாலும், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவதென்ற விரும்பத்தாக, துரதிஸ்டவசமாக முடிவெடுத்தாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு செயலிழந்து விடுமென மக்கள் அச்சமடைய தேவையில்லை. நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து செயற்படுவோம், தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றார்.