அண்மையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமாநகர்க் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் பயன்தருமரங்களையும், பயிர்ச்செய்கையினையும், துவம்பசம் செய்திருந்தன.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்ளில் வெளிவந்த நிலையில் ஐக்கியதேசியக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு. பி.ரஜீந்திரன் ஏற்பாட்டில் வனவிலங்குகள் பரிபாலனத் திணைக்கள அதிகாரிகள் நேற்று வீரமாநகருக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுடன் யானைகள் கிராமத்துக்குள் நுழையும் வழித்தடங்களையும் நேரடியாகப் பார்வையிட்டனர்.
இதன் பிற்பாடு கிராம மக்கள் நாகம்மாள் விவசாய சம்மேளனப்பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலாளரினால் இச்செயற்பாட்டுக்கென பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோருடன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இப்பகுதியில் தென்னிலங்கையில் பல்வேறு நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்ட யானைனகள் இனந்தெரியாதோரினால் இரவு வேளைகளில் கொண்டு வந்து இறக்கி விடப்படுவதாகவும், இந்த யானைகளினை துரத்த முடிவதில்லை எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து யானைகள் சஞ்சரிக்கும் இடங்களை அடையாளப்படுத்தவும், அங்கிருந்து யானைகள் கிராமங்களுக்குள் நுழையாதவாறு மின்சாரவேலிகளைத் துரிதமாக அமைக்கவும், அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தனர்.எவ்வாறாயினும் கடந்த பல வருடங்களாக யானைகளினால் ஏற்படும் அழிவுகள் மற்றும் யானைவேலியின் அவசியம் தொடர்பில் விவசாய சம்மேளனங்கள் உட்பட்ட பல அமைப்புக்களினால் பல கோரிக்கைக் கடிதங்கள் பிரதேச செயலாளர் மாவட்டச்செயலாளர் மற்றும் அரசியல்வாதிளுக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் அவை எவையும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவோ அல்லது அவர்களிடம் இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படவோ இல்லை என களஆய்வுக்காக வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளமையானது மக்களின் பிரச்சனைகளை தீர்க்காது அவர்களை அதே நிலையில் வைத்து அரசியல் செய்யவே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முற்படுவதாக உணர முடிகிறது.என அங்குள்ள பொதுவமைப்புக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது